சனி, 19 மார்ச், 2022

ஆசீவக கோட்பாடுகள்

 

ஆசீவக கோட்பாடுகள்

1.0   முன்னுரை

ஆசீவகம் கோட்பாடுகளைக் கொண்டு முன்னெழுந்த மதம் ஆகும். ஆசீவக  கோட்பாடுகள் ஆசீவகத்தின் முதன்மை ஆசிரியர்களாலும், திசை போக்கர்களாலும் உருவாக்கப்பட்டதே. இதில் நால்வர் சங்கப்புலவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்களின் பாடல்கள் புறநானுறு நூலில் காணப்படுகின்றது. ஆசீவக கோட்பாடுகள் பின்வருமாறு,   

1.   மற்கலி கோசாலரின் நியதிக்கோட்பாடு என்ற ஊழ்க கோட்பாடு,

2.   பூரணரின் வினை மறுப்பு கொள்கை அல்லது தற்செயல் கோட்பாடு, வண்ணக்கோட்பாடு,   

3.   நரிவெரூஉத்தலையாரின் பொருள் ­முதல்வாதமும், உத்தேசவாதமும்,

4.   பக்குடுக்கை நன்கணியாரின் நிலைப்பேறும் அணுக்கோட்பாடும்,

5.   நிகந்த நாத புத்தர் என்ற மகாவீரரின்  னகண்ட வாதம் அல்லது அனேக வாதம்,

6.   சஞ்ய பேலட்ட புத்தாவின் அஜ்னானம் என்னும் ஐயுறவு கோட்பாடு.

மேற்கூறிய இக்கொள்கைகள் முதன்மைக் கொள்கைகள் ஆகும். இதனுடன்

1.   தொல்கபிலரின் சாங்கியம் என்றழைக்கப்பட எண்ணியகோட்பாடு

2.   கணாதரின் வைசேடிகம் என்றழைக்கப்பட்ட சிறப்பியக்கோட்பாடு

3.   கோதமனாரின் நியாயவாதம் என்றழைக்கப்பட்ட அளவையியல்

இக்கோட்பாடுகளினை ஆக்கியோர்களில் கோசாலர், பூரணர், நரிவெரூஉத்தலையார், பக்குடுக்கைநண்கணியார், தொல்கபிலர், கணாதர் என்னும் கணியாதன், கோதமனார் என்னும் பாலைக்கெளதமனார் போன்றோர் தமிழர்களே. இதில் சாங்கியமும் வைசேடிகமும் வைதீக ஆறு தரிசனங்களில் சேர்க்கப்பட்டுவிட்டது. தற்காலத்தில் வைசேடிகத்தை ஆய்ந்த ஆய்வாளர்கள் இக்கோட்பாடுகள் அவைதீக கோட்பாடுகள் என உறுதிசெய்துள்ளனர். ஆசீவக கோட்பாடுகளைக் காண்பதற்கு முன் மகா நிமித்தங்களைப் பற்றியும், மக்கா என்னும் உறுதிப்பொருட்கள் பற்றி காணலாம்.

2.0   மகா நிமித்தங்கள்

ஜைனர்களின் நூலான பகவதி சூத்திரத்தில் ஆசீவக திசை போக்கர்களால்  உருவாக்கப்பட்ட எட்டு மகாநிமித்தங்களைப் பற்றியும், மக்கா என்னும் இரண்டு உறுதிப்பொருட்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த பத்து உறுப்புகளும் பலரின் கருத்தாய்வுகளுக்கு பின்னரே முழுமையாக வரையறை செய்யப்பட்டது. வரையறை செய்தபின் கோசாலரின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டன. அபய தேவன் தன்நூலில் மகா நிமித்தங்களின் எட்டு பிரிவுகளைப் பற்றி கூறியுள்ளார். மகாநிமித்தங்களின் எட்டு அங்கங்களாவன

1.      திவ்யம்    – இறைமை குறித்தவை

2.      ஒளத்பாதம் – முற்குறி காணல் அல்லது சகுணம் குறித்தவை

3.      அந்தரிக்சம் - வான் குறித்தவை

4.      பௌமம்   – நிலமான உலகம் குறித்தவை

5.      அங்கம்    - உடல் குறித்தவை

6.      சுவரம்     - ஓசை குறித்தவை

7.      இலக்ஷணம் - பண்புகள் குறித்தவை

8.      வியஞ்சனம் – சுட்டியவை அல்லது சுவை குறித்தவை

        இந்த எட்டு நிமித்தங்களைக் காணுகையில் வள்ளுவரின் குறளே நினைவுக்கு வருகின்றது.


சுவை,ஒளி, ஊறு,ஓசை,நாற்றம் என்றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு

    சுவையும், ஒளியும், ஊறும், ஒசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன்மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும், ஆராய்வான் அறிவின் கண்ணதே உலகம். எனவே இவ்வைந்துடன் முதற்பொருளான நிலமும், பொழுதும், இறையும் இணைந்ததே இவ்வெட்டும் என கூறலாம். இவ்வாறாக முதற்பொருளுடன் கருப்பொருளும், அதனுடன் இன்று வழங்கப்பெரும் ஞானேந்திரியம் அப்படியே இந்த நிமித்தங்களுடன் பொருந்திப் போவனவாக உள்ளன.

அபய தேவன் குறிப்பு போன்றே தானங்க சூத்திரத்தில் எட்டு பிரிவுகள் காணப்படுகின்றன. அவ்வெட்டில் முதலாம் கூறான திவ்யம் என்ற கூறுக்கு பதிலாக சுவனம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு சுவனம் என்றால் கனவு என்றே பொருள்படும். சுவனம் என்பது அவத்தைகளில் ஒன்றாகும்.

        சாக்கிரஞ் சுவனந் சுழுத்தி. (ஞானா.9.9)

இங்கு கனவு என குறிப்பிடப்பட்டுள்ளது தன்னைக்கடந்த நிலையாகும். ஆழ்ந்த நிலையில் மட்டுமே கனவு தோன்றும், ஆழ்நிலையில் ஞானேந்திரியம் இயங்காது. இதனை கபிலரின் தனது சாங்கிய காரிகையில் மிகத் தெளிவாக கூறியுள்ளார். ஆனால் கபிலர் இறைவன் என்ற ஒரு கருத்தியலைப் பற்றி பேசவில்லை.   

மேலும் அபயத்தேவன் அளித்த பட்டியல் போன்றே, உத்திரத்தியாயன சூத்திரத்தில் ஒரு பட்டியல் காணப்படுகின்றது. ஜைன துறவியான காலகர் இந்த 8 மகா நிமித்தங்களையும் ஆசீவகர்களிடமிருந்தே கற்றதாக கூறியுள்ளார். இதன் மூலம் பெரும்பாலான ஆசீவகர்கள் கணியர்களாகவும், வானியல் வல்லுநர்களாகவும் இருந்துள்ளனர் என்பது புலப்படுகின்றது. இரண்டு மக்கா எனப்படும் உறுதிபொருள் நூலானது, ஆசீவக பாடல்களையும், நடனத்தையும் பற்றியது என முனைவர் பாசாம் குறிப்பிடுகின்றார்.

சிரவண பெலகோலாவில் உள்ள பத்திரபாகுவின் கல்வெட்டானது உஜ்ஜைனியில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பின் நிகழப்போகும் இயற்கை பேரிடரை பற்றி முன்கூட்டியே மகாநிமித்த நூல் கூறியதாகவும், அந்நூல் முக்காலங்களையும் கூறவல்லது எனவும் அவர் அக்கல்வெட்டில் பதிப்பித்துள்ளார்.

ஜைனர்களுக்கு முன்பே பல புனித நூல்களைக் கொண்ட மதமாக ஆசீவகம் விளங்கியுள்ளது. இதை தமிழ்ச்சங்க நூல்களும் உறுதிப்படுத்தியுள்ளன. மணிமேகலை நூல், ஆசீவர்களின் புனித ஏடுகளினை மற்கலியின் நூல் என்றே சுட்டுகின்றது. நீலகேசி நூல், ஆசீவகர்களின் புனித ஏடு ஒன்பது கதிர் என்றும் உறுதி செய்கின்றது, மேலும் ந்நூல் இந்த அண்டத்தின் அணு அமைப்பு பற்றியும், ஆசீவகர்களின் உறுதிப்பொருட்கள் பற்றியும் கூறுகின்றது என அந்நூல் கூறுகின்றது. அவ்வுறுதிப் பொருட்களாவன 1.அண்ணல் என்ற இறைமை 2. கூறுகள் எனப்படும் பொருள்கள் 3. மாற்றம் குறித்த நிகழ்வுகள் என்பனவாம். மேலும் அந்நூலில், மற்கலி இறைநிலை அடைந்ததால் பேசுவதில்லை என்றும், ஆனால் அவருக்கு பின்னிருந்து ஏடுகளினை எழுதியோர் ஒக்கலி, ஓகலி என்னும் இருவர் நீலகேசியில் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆனால் இது தவறு என்றே எண்ணத் தோன்றுகின்றது. நிர்வாண நிலையடைந்தோர் பேசுவது மிகவும் குறைவே. எனவே மற்கலி நிர்வாண நிலையடைவத்ற்க்கு முன்னரே இந்நூல்கள் தொகுக்கப்பட்டிருத்தல் வேண்டும். மேலும் இந்த ஒக்கலி மற்றும் ஓகலி என்னும் இருவர் மற்கலிக்கும் ஆசீவகத்தினை பின்பற்றுவோர்க்கும் இடையில் பாலமாக செயல்பட்டதாக அந்நூல் கூறுகின்றது. இதுவரை ஆசீவகம் பேசும் எந்த நூல்களிலும் ஒக்கலி, ஒகலி பற்றிய குறிப்புக்கள் இல்லை, ஆனால் நீலகேசி நூலில் ஒக்கலி, ஒகலி ஆசிவக வாத சருக்க பகுதியில் நீலகேசியின் கேள்விகளுக்கு பதில் தருவது போல் உள்ளது. இச் சருக்கத்தில் நீலகேசி கேட்கும் கேள்விகளுக்கு ஒக்கலி, ஓகலி தரும் பதில் ஏற்புடையவனாக இல்லை இது இடைச் செருகலாக இருக்கலாம் என்பதனை முனைவர்.ர. விஜயலட்சுமி தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். (முனைவர். ர. விஜயலட்சுமி தமிழகத்தில் ஆசீவகர்கள், 11.ப45) இனி ஆசீவக கோட்பாடுகளைப்பற்றி காண்போம்.     

3.0 மற்கலியின் நியதிக்கோட்பாடு என்னும் ஊழ்க கோட்பாடு

ஆசீவகத்தின் முதன்மைக்கோட்பாடும், அடிப்படைக்கோட்பாடும் நியதி என்னும் ஊழ்க கோட்பாடு ஆகும். இக்கோட்பட்டினை விதி கோட்பாடு எனவும் அழைப்பர். கோசாலரின் முடிவான கோட்பாடும் இதுவே. இக்கோட்பாட்டினை ஜைன மதத்திலோ, பெளத்த மதத்திலோ, அன்றைய இந்து மதத்திலோ காணமுடியாது. இந்த பெரு அண்ட வெளியின் ஊக்க காரணியாக செயல்படுவது விதியாகும். இவ்வுலகத்தின் மாற்றங்களின் முகவராய் விதி உள்ளது. ஊழ்கம் என்னும் விதியின் தாக்கத்தினாலேயே ஒருவரின் வாழ்வில் பெருங்குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இப்பெருங்குற்றங்களுக்கான அடிப்படைக் காரணம் என்ற ஒன்று இல்லை விதியின் தாக்கம் என்பது வலிமையான ஒன்று ஆகும்.

ஒரு மனிதரின் செல்வத்திற்க்கும், சமூக தகுதிக்கும், அவரின் துன்பத்திற்கும், இன்பத்திற்கும், விதியே அடிப்படை, ஒருவரின் வலிமை, ஒருவரின் தாக்கம், வீரம், கோழைத்தனம், பேதைத்தனம், வலிமை குன்றிய நிலைகளுக்கு ஒற்றைக் காரணியே காரணம், அவ்வொற்றை காரணியே இவ்வனைத்தையும் தீர்மானிக்கின்றன. வெள்ளத்தினால் ஏற்படும் அழிவு, இயற்கையினால் ஏற்படும் துன்பங்கள், காரணம் இல்லாமலேயே விளையும் இன்ப துன்பங்கள், பிறப்பு, இறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்குக் காரணம் ஊழ்.

பேதையாயினும், முட்டாள்களாயினும், அறிவுமிக்கோராயினும், தனக்கு விதிக்கப்பட்டதை அனுபவித்தே ஆகவேண்டும். அதில் துன்பம் என்பது காற்றில்லா இடத்தில் தூக்கி எறியப்பட்ட நூல்க்கண்டானது எவ்வளவு தூரம் நீண்டு செல்கின்றதோ அவ்வளவு நீளமானது. இயற்கை ஏற்படுத்தும் பல சீரழிவுகளுக்கு மனிதன் தன் விதியை காரணம் காட்டிச் செல்கின்றான். என்பது இக்கோட்பாடிற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.

மற்கலி கோசாலர் கர்மா என்னும் கொள்கையில் நம்பிக்கையற்றவர். உயிர்களானது 8,40,00,000 மகா கல்ப ஆண்டுகள் பிறப்பெடுக்கும் என கூறப்பட்டுள்ளது இது இயற்கைக்கும் அப்பாற்பட்டதும் ஏற்புடைய கருத்தாக இல்லை என்றே கருதுகின்றேன் ஏனெனில் இறந்த உயிர் பிறப்பதில்லை என்ற கோட்பாடு உடையவர்களே ஆசீவகர்கள்.

அனைத்து உயிர்களும் மூன்று கூறுகளால் முன்னேற்றமடைகின்றன என ஆசீவகம் கூறுகின்றது. அவை 1.நியதி என்னும் விதி 2.சங்கதி என்னும் வாய்ப்பு 3. பாவம் என்னும் இயற்கை ஆகும், இம்மூன்று கூறுகளும் ஏற்கனவே தீர்மாணிக்கப்பட்ட ஒன்று. பரிணாமம் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விதியாகும். இதை எவராலும் மாற்ற இயலாது. அதேபோல் இதற்கு, இயற்கை தடைகளும் உண்டு, அத்தடைகளை நீக்குவதும் இயலாத காரியமே மேலுமிது இயற்கையால் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்று என்றும் இக்கோட்பாடுகூறுகின்றது.

இயற்கை விதிப்படி மாற்றம் மற்றும் முன்னேற்றத்தின் விகிதமானது ஒரு குறிப்பிட்ட வரையறைகளுக்குள் நிகழ்வது, முதிர்ச்சியடைதலில் இயற்கையும், விதியும் சேர்ந்தே பணியாற்றுகின்றன. பாவம், சங்கதி இவ்விரண்டு கூறுகளும் விதியின் உட்கூறுகளே. பாவம் என்பது சுபாவமே, சுபாவம் என்பது இயற்கையின் பண்புகள் குறித்ததே. நியதியே சிறந்த கோட்பாடு ஆகும் இது வளர்ச்சி, முன்னேற்றத்தை கட்டுப்படுத்துகின்றது என சாங்கிய கோட்பாடு கூறுகின்றது.  

குணரத்தினரின் முக்கிய கேள்வி ஒன்று இக்கூற்றுக்கு சார்பாக உள்ளது. அக்கேள்வி என்னவெனில்

முள்ளினை கூர்மைப்படுத்தியது எது?

இயற்கையில் உயிர்களினையும், பறவைகளினையும் உருவாக்கியது எது?

முற்சியின் பலன் யாது?”

இயற்கையில் எந்த ஒன்றும் தன் விருப்பப்படி செயல்படுவதில்லை. மற்கலியின் இக்கோட்பாடு முழுமையும் அகரியவாதம் எனப்படும். இக்கோட்பாட்டாளர்கள் புருஷகாரத்தில் நம்பிக்கையற்றவர்கள். புருஷகார என்பது முயற்சியினையும் அறிவையும் குறிக்கும்.

இக்கோட்பாட்டின் அடுத்த கருத்து, ஒருவருக்கு இன்பமும் துன்பமும் பிறாரால் விளைவதில்லை என்பதாகும். இதைத்தான்  தமிழ் நூலில்  தீதும் நன்றும் பிறர் தர வரா என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இன்பமும் துன்பமும் வாய்ப்பினால் நிகழும். இன்பம் மற்றும் துன்பத்தினால் நிகழும் அனுபவம் தற்செயலானவையே. இன்பமும் துன்பமும் தற்செயலானவையே. அனைத்து உயிர்களும் விதிவயப்பட்டதே.

சங்கதி எனப்படும் வாய்ப்புகளும், பாவம் எனப்படும் பண்புகளும், விதி என்னும் நியதியை வலுப்பெற செய்கின்றன. அனைத்து செயல்களின் உட்கூறாக நின்று செயல்படுவதும் இம்மூன்றே. விதியின் மறுவடிவமே இந்த வாய்ப்புக்களும் பண்புகளும் ஆகும். இது மற்ற துறவு மதங்களிடையே அலட்சிய போக்காகவும் காராணமற்ற போக்காகவும் விமர்சிக்கப்பட்டது. எனவே ஆசீவகர்கள் அகேதுகவாதிகள் என்றும் பெயர்பெற்றனர். மனிதரின் செயல்வினைகள் எவ்விளைவினையும் ஏற்படுத்தாதவை அவை பயனற்றவை கூறியோர் அகரியவாதிகள் எனப்பட்டனர்.  

முக்தி என்பது நிகழும்போது நிகழும், இதற்கென குறுக்கு வழி இல்லை. விதி என்ற ஒன்றே முக்தியை நிகழ்த்தும், நேரம் அல்லது விதி வரும் வரை காத்திரு, மனிதனின் இன்பமும், துன்பமும், விதியால் நிகழ்பவையே, முக்தி என்பது ஒரு பிறப்பில் நிகழுவதில்லை. முக்தி என்று நிகழும் என்று ஆர்வத்துடன் காத்திருக்காதே. இதுவே பாலி மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசீவக முக்தி சூத்திரம் ஆகும். இதைத்தான் இன்றைய சித்தர் மரபு விட்டகுறை தொட்டகுறை என்று வழக்காற்றியலில் கூறுகின்றது.

ஒருவரின் அறச்செயல்களாலோ, சுய கட்டுப்பாட்டினாலோ, துறவறத்தினாலோ விதியின் இயல்பினையும் விதியினால் ஏற்படப்போகும் இன்ப துன்பங்களினை மாற்றியமைக்க இயலாது.

அன்றைய இந்து மதம் ஆசீவகர்களைப்பற்றி அதிகமாக அறிந்திருக்கவில்லை. அதனால் ஆசீவகர்கள் பற்றிய குறிப்புகள் இந்துமத நூல்களில் அதிகமாக இல்லை.

இந்த நியதி வாதத்தை, தமிழில்  ஊழ்வினைக் கோட்பாடு என்று கூறலாம். சமண இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்என்று இளங்கோவடிகள் கூறியிருப்பது, நியதி வாதம் கூறும் ஊழ்வினையையே, திருக்குறளில் குறிப்பிடப்படும் ஊழில் பெருவலி யாவுள – என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட விதியாகிய ஊழைவிட வலிமையானது உலகில் என்ன இருக்கிறது - என்ற கருத்தை, நியதி வாதம் சார்ந்த ஊழ்வினைக் கோட்பாட்டுக் கருத்தாக எடுத்துக்கொள்ளலாம்.

நீர்வழிப் படு உம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம்’’’ என்ற புறப்பாட்டில் இது விளக்கப்பட்டிருப்பது நுண்ணிய நூல் பலகற்று அக்கற்றறிவைக் கொண்டு ஊழைமாற்றி விட நினைப்பது தவறு. இறை வலிமை சேர்ந்த செயலாதலால் மற்ற வல்லமைகளால் ஊழை எதிர்க்க இயலாது. மக்கள் செய்யும் செயல்கள் எல்லாம் ஒரே காலத்தில் தம் பயனை உருத்துத் தருவதென்றால், உயிர்களால் அவற்றைத் தாங்கவே இயலாது. மற்றும் வினைகள் தாம் செய்யப்பட்ட முறையிலன்றி முன் பின்னாக, பின் முன்னாக வருவது அவ்வினையின் தன்மைக்கேற்ப நிகழும். இதற்குக் காரணம் அவற்றின் வன்மை, மென்மைகளாகும். 

சங்ககால வாழ்க்கை இயற்கை வழிப்பட்டது. இயற்கை நெறிப்பட்டது. இயற்கையின் செயலாக்கங்கள், வினைகளுக்கு முன்னால் மனிதனால் எதுவும் செய்ய இயலாது என்பதனைச் சங்கத் தமிழர்கள் நன்கறிந்திருந்தனர். இந்த இயற்கையின் ஓர் ஒழுங்கமைவான ஆற்றலையே ஊழ், விதி, என எடுத்துரைத்தனர். மக்களை ஒன்றிணைப்பதும், கூட்டுவிப்பதும், பிரிப்பதும் இந்த ஊழ்வினைதான் என்ற நம்பிக்கை பரவலாக்கம் பெற்றிருந்தது. இதனைக் கருத்தில் கொண்டே தொல்காப்பியர் ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப என்றுரைத்தார்.

மேலும், வினை, விதி, ஊழ், பால் என்னும் சொற்கள் தம்முள் சிறு வேறுபாட்டுடன் ஒரேபொருளைத் தருவன. சங்க இலக்கியங்கள், இவற்றுள், பால் என்ற சொல்லையே பெரிதும் எடுத்து வழங்கும். பால்தர வந்த பழவிறற் றாயம் (புறம்75, விதி தரப்பட்டுத் தம்பால் வந்த அரசுரிமை), “நல்லியக் கோடனை உடையை வாழியெற் புணர்ந்த பாலே” (புறம்176, நல்லியக் கோடனைத் துணையாக நீ உடையையாதலான், என்னைப் பொருந்திய விதியே).                                                           

நல்லைமன் றம்ம பாலே மெல்லியற்

றுணைமலர்ப் பிணைய லன்னவிவர்

மணமகிழ் இயற்கை காட்டியோயே

இத்தலைமக்களின் திருமணத்தைக் காட்டிய விதியே நீ நல்லை (குறுந்-229) .

 

ஒன்றே வேறே யென்றிரு பால்வயின்

ஒன்றி யுயர்ந்த பால தாணையின்

ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப(களவியல்-2)

                          

இத்தொல்காப்பிய சூத்திரத்தில் வரும் முதலிலுள்ள பால்,’ இடம் என்று பொருள்படும். பாலதாணைஎன்பதற்குப் பால்வரை தெய்வத்தின்ஆணையாலேஎன்பது பொருள். பால்வரை தெய்வமென்பது எல்லார்க்கு மின்பத் துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையையும் வகுக்கும் தெய்வம் என்பது பொருள். (தொல்.சொ.54.சேனா) அதாவது வினை தானே பலனையூட்டாது. வினை செய்தானையும் வினையையும் வினை செய்தவனையும் அறிந்து அவ்வினைக்கும் மேலாம் தெய்வம் பலனை வகுத்து ஊட்டும் என்பது பண்டைத் தமிழர் கருத்து. திருவள்ளுவரும் வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி, தொகுத்தாருக்கும் துய்த்த லரிது”(377) என்றார். தெய்வம் வகுத்த வகையானல்லது ஒருவனுக்கு நுகர்தலுண்டாகாது. அத்தெய்வம், ஓருயிர் செய்த வினையின் பயன் பிறிதோருயிரின்கட் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின், வள்ளுவர் வகுத்தான்என்றார். அதனையே தொல்காப்பியர், ‘பால்வரைத் தெய்வம்என்றார்.

அதேபோல், அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் என்று திருக்குறள் கூறுவதையும் ஆசீவகக் கருத்தாகக் கருதலாம். இந்தக் குறளின் பொருள் – “தீய மனம் படைத்தவனுக்கு ஆக்கங்கள் (நன்மைகள்) சேர்வதையும், நல்ல மனம் படைத்தவனுக்கு கேடுகள் (தீமைகள்) சூழ்வதையும் எதனால் இப்படி ஆகிறது? என்று நினைத்துத்தான் பார்க்க முடியுமே தவிர, விடை காண இயலாதுஎன்பதே. அவ்வாறு நினைத்துப் பார்க்கையில், ‘அது விதியேஊழ்வினை.

விதியை மதியால் வெல்லலாம்’, ‘நமது கர்மவினைகளுக்கு நாமே காரணம் என்பதால், புதிய நல்வினைகள் மூலம் அதனை மாற்றிக்கொள்ளலாம்என்பதை எல்லாம் நியதி வாதம் ஒப்புக்கொள்வதில்லை. விதிப்படிதான் எல்லாம், முடிவும் (முக்தியும்) கூட விதிப்படிதான்என்பதில் திடமான நம்பிக்கை கொண்டதால், மனித முயற்சிகளை அது ஏற்பதில்லை.

வள்ளுவரின் வழி நின்றால் ஊழ்கம் என்பதனை ஆகூழ் எனவும் போகூழ் எனவும் பிரிக்கலாம். ஆகூழ் என்பது சேர்ப்பினையும், போகூழ் என்பது இழப்பினையும் எற்படுத்தும் விதி பற்றி பேசும்.  மேலும் இழவூல் அறியாமையால் உயிர்கள் அடையும் தாழ்வு பற்றியும், ஆகலூழ் உயிர்கள் அறிவினால் அடையும் உயர்வு பற்றியும் பேசும்மக்கலி கோசாலரின் இந்த நியதி வாதம் மட்டுமின்றி, அவரது நண்பர்களாகிய பூரண காஸ்யபரின் அக்கிரியா வாதம் (வினை மறுப்புக் கோட்பாடு), பக்குட காச்சாயனரின் சசஸ்த வாதம் (நிலைப்பேறு கோட்பாடு) ஆகிய மேலும் இரண்டு கோட்பாடுகளும் இணைந்தே.நாம் எந்தக் கிரியைகளையும் (வினைகளையும்) செய்வதில்லை, ஆகையால் பாவ - புண்ணிய பலன்கள் என்று எதுவும் இல்லை என்பதே அக்கிரியா வாதம். இந்தத் தத்துவப்படி, ‘ஒருவர் எதைச் செய்தாலும் அதற்குரிய நல்ல பலன், தீய பலன் என்று எதுவும் இல்லை. எனவே, ஒருவருக்கு ஏற்படும் நன்மைக்கும், தீமைக்கும் எந்தக் காரணமும் இல்லை. தீமை என்று உலகத்தார் சொல்வதைச் செய்வதால் பாவமோ, நன்மை என்று உலகத்தார் சொல்வதைச் செய்வதால் புண்ணியமோ ஏற்படுவதில்லைஎன்பதே அக்கிரியா வாதம்.

அக்கிரியா வாதத்தைப்போல் பாவ - புண்ணிய மறுப்பையும், நியதி வாதம்போல் மாறாத்தன்மையுடைய அடிப்படையையும் ஒருசேர வலியுறுத்துகிறது பகுத கச்சாயனரின் சசஸ்த வாதம். இந்த உலகின் இயக்கத்துக்கு நிலம், நீர், தீ, காற்று, உயிர், இன்பம், துன்பம் ஆகிய ஏழு கருப்பொருள்களே காரணம். இவை ஏழும் தாமாகவே இருப்பவை, உண்டாக்கப்பட முடியாதவை, அழிவற்றவை, மாற்றப்பட முடியாதவை, நிலையானவை. எனவே, ஒருவர் மற்றவரது இன்பத்துக்கோ, துன்பத்துக்கோ காரணமாக முடியாது. இதேபோல், கொலைகாரர் என்று கொலைக்குக் காரணமானவர் என்றோ யாரும் கிடையாது. உயிர் நிலையானது என்பதால், ஒருவர் மற்றொருவரின் தலையை வாளால் வெட்டினால், அவர் அடுத்தவரின் உயிரைப் பறித்ததாக அர்த்தம் இல்லை. ஏழு கருப்பொருள்களுக்கும் இடையே அந்த வாள் சென்றது என்றே பொருள்என்கிறது சாஸ்சதா வாதம்.

மாறா விதி (நியதி வாதம்), வினை மறுப்பு (அகரியா வாதம்), நிலைப் பேறு (சாஸ்சதா வாதம்) ஆகிய மூன்றும் இணைந்ததே ஆசீவகம். இந்தக் கோட்பாட்டின்படி, எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு அதன் படியே நடைபெறுவதால், காலம் என்பதை வரையறைக்கு உட்படுத்த யலாது.

விதி வலியது, விதியின் முன் மனிதன் திறமையற்றவனாகவே உள்ளான். விதியின் மேலோ அல்லது தன் எதிர்காலத்தின் மீதோ மனிதன் தன் ஆதிக்கத்தை செலுத்த இயலாதவனாகவே உள்ளான், விதியே ஒவ்வொருவரின் செயலை தீர்மானிக்கின்றது. விதியினை தர்க்க ரீதியில் காணும்போது எதிர்காலத்திற்கான சில நிகழ்வுகளின் செயல்கள் தீர்மானிக்கப்பட்டுவிட்டன, அவ்வாறு தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒன்றினை மறுக்கவோ, அதனை தடுக்கவோ, புறந்தள்ளவோ இயலாது.

நியதி – கர்மா வேறுபாடு:

நியதி என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. அதுவே நம் செயல்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றது. பெளத்தம், சமணம், இவ்விரண்டிற்க்கு முன்னதாகவே தோன்றியதுதான் இந்த நியதி கொள்கை. நியதி கொள்கையை உருவாக்கியவர்கள் ஆசீவகர்களே. வைதீகத்தில் மிகப்பழைய நூலான ரிக் வேதம் கூட இக்கொள்கையை பேசியதில்லை. ரிக் வேதத்தை பொருத்தளவு கடவுளே முதன்மையானவர். விதி என்ற ஒன்றை இறை கோட்பாடுகள் கூட பேசியதில்லை. பலர் நியதி என்னும் ஊழ்க கோட்பாடு வைதீக மதத்தில் இருந்து எடுக்கப்பெற்றது என்று கருதுகின்றனர். ஆனால் அது தவறு இக்கோட்பாடு ஆரியர் அல்லாத பண்டைய இந்திய சமூகத்தை சேர்ந்த கோட்பாடு ஆகும். கர்மா என்பது வைதீகத்தால் உண்டானது. கர்மா என்பது ஒவ்வொரு மனிதனின் நிகழ்கால நிலை, அவரவர்களின் கடந்தகால நடத்தைகளைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது. சுருங்கக்கூறின் ஒரு மனிதனின் முந்தைய பிறப்பின் பாவ புண்ணியங்கள் நிகழ்கால நிலையை தீர்மானிக்கின்றன. அதுவே அவர்களின் நிகழ்கால வாழ்வில் செயலாக்கம் பெறுகின்றது. நிகழ்கால வாழ்வை சரி செய்துகொண்டால் எதிர்கால வாழ்வில் நலமாக வாழலாம் என்பதே கர்மா ஆகும். ஆனால் இக்கோட்பாட்டிற்க்கு முற்றிலும் எதிரான கோட்பாடே ஊழ்க கோட்பாடு என்னும் நியதி கோட்பாடு ஆகும். இந்த விதி கோட்பாடே இந்தியா மற்றும் தமிழகம் முழுமையாக பரவியிருந்தது.  

நியதி கோட்பாடு இயற்கையாகவே உருவான ஒன்று. மனிதன் தோற்றதாய் உணர்ந்த போதும், விரும்பிய ஒன்றினை இழந்துவிட்ட போதும், பிறந்த உயிர் சுற்றம் சூழ இழந்தபோதும், இட்ட பயிரும், வளர்த்த உயிரும், இயற்கையாகவோ, இயற்கை பேரிடராலோ, செயற்கையாகவோ உற்றவரை பிரிந்து செல்லும் போதும், பிரிந்து அழியும் போதும் ஒருவர் தன்னை அறியாது அந்த பிரிவினையை ஆற்ற இயல்பாகவே மனிதனின் மனது இதுவெல்லாம் இயற்கையின் நியதி அல்லது விதி என்றே ஆற்றுப்படுத்திக்கொள்ளும். இதுவே இக்கோட்பாடின் முதற்படி.

இக்கோட்பாட்டில் இயற்கையாக அல்லது செயற்கையாய் உருவாக்கப்பட்ட இழப்புக்கு அப்பொழுதே விதியின் பயனாய் விளைந்தது என்று எண்ணி ஆற்றுப்படுத்திக்கொள்வர். இழப்பினால் ஏற்படும் கவலையின் காரணத்தை விதி அல்லது நியதியின் மீது ஏற்றிக்கூறுவதால் மனச்சுமை அகன்று மனம் விரைவில் தெளிவுற்று அதை கடந்து செல்வர், ஆனால் கர்ம வினை கோட்பாட்டின் படி இயற்கையாக அல்லது செயற்கையாய் உருவாக்கப்பட்ட இழப்பு ஒருவரின் முற்பிறவியின் தீவினைப்பயனால் நிகழ்ந்ததே என்று கூறி அது எதிர்கால பிறவியில் நிகழாமல் இருக்க பரிகாரங்களையும் கூறும், மேலும், அடுத்த பிறவி உண்டா இல்லையா என்று தெரியாத போதும் அதைப்பற்றி கவலைகொள்ள வைப்பதே கர்மா ஆகும்.

பிற நியதிக் கோட்பாடுகள்:

ஆசீவகர்கள் காலத்தை வரையறைக்கு உட்படுத்தவில்லை. காலம் எல்லையற்றது, காலம் என்பது பொழுதுகளிலிருந்து வேறுபட்டது. பொழுதுகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை.  

சதுவா நியதங்கள்: இக்கொள்கை நியதியை அடிப்படையாக கொண்டது, நான்கு + ஆ (நான்வா) கொள்கை அல்லது சதுவாநியதங்கள் என்பது ஆவதாம், ஆமாங்காம், ஆந்துணையாம், ஆங்காலத்தாம் ஆகும்.  நீலகேசியில் உள்ள 704, 705 வது பாடல்கள் இக்கொள்கையை நமக்கு உணர்த்துகின்றது.

அதுவா வதுவு மதுவாம் வகையு

மதுவாந் துணையு மதுவாம் பொழுதுஞ்

சதுவா நியதத் தனவா வுரைத்தல்

செதுவா குதலுஞ் சிலசொல் லுவன்யான். (நீல-704)

 

அரிவை யவளாங் குழவி யவளை

யுரிய வகையா லுவந்தாங் கெடுத்தா

லரிய முழமூன் றளவாம் பொழுதும்

வரிசை யுரைத்த வருட மதன்பின். (நீல-705)

 

மேற்கூறிய பாடல்கள் இரண்டும் பெண்களின் வளர்ச்சிப் பருவத்தை எடுத்துக்காட்டாக கொண்டு இக்கொள்கை நிலைநிறுத்தப்படுகின்றது.

ஆவதாம்: நியதிப்படி உள்ள ஒன்றை மாற்ற இயலாது. ஆண்குழந்தை என்றால் அது ஆண் குழந்தை தான் அதை பெண்குழந்தை என்று கூறமுடியாது. உலகத்தின் மாற்ற இயலா நியதிகள், உள்ளதனை உள்ளபடி கூறுதல் இதனை அடிப்படையாக கொண்டவை.  நீலகேசி பாடல்படி ஒரு பெண் அரிவை பருவத்தாள் என்றால் அவள் அரிவை பருவத்தாள் தான், என்பது மாற்ற முடியாத ஒன்று, அது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. இம்மாற்றத்தினை எவராலும் நிறுத்தவும் முடியாது.

ஆமாங்காம்: நியதிப்படி உள்ள ஒன்று அது அதற்கான பாதையில் தான் பயணிக்கும் அதனை மாற்ற இயலாது ஒரு பெண் குழந்தையை வளர்க்க வேண்டிய விதத்தில் வளர்த்தால் அப்பெண்குழந்தை அரிவையாகவே மாறும்.

ஆந்துணையாம்: இது அளவினைக் குறிக்கும், வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் தான் நிகழும், அதற்கு கூடவோ குறையவோ ஆகாது, அது வளர்வதற்கு எடுக்கும் காலமும் மாறுபடாது. ஒன்று எவ்வளவு வளர்ச்சி அடையவேண்டுமோ அந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்தே தீரும். ஒரு பெண் அரிவை பருவத்தில் இருக்கும் போது எந்த அளவு வளர்ச்சி அடையவேண்டுமோ அந்த அளவு வளர்ச்சி அடைவாள் அதனை தாண்டி வளர முடியாது. இது நீளம், அகலம், உயரம், கொள்ளளவு, பருமன் போன்ற பரிமாணங்களையும் குறிக்கும். 

ஆங்காலத்தாம்: நடக்க வேண்டிய காலத்தில் ஒன்று நடந்தே தீரும், அதனை மாற்ற இயலாது. மரணம் வரும் காலத்தில் வந்தே தீரும். மரங்கள் அதெற்கென காலம் வரும்போது அது தன் கனிகளை ஈந்தே தீரும், இலைகளை உதிர்த்தே தீரும், இதனை எவராலும் நிர்ணயிக்க முடியாது. அதனால் தன் மரங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இலைகளை உதிர்ப்பதும், கனிகளை ஈனுவதுமாக உள்ளன.

தவிர்க்க இயலா நிகழ்வுகள்:

      விதியின்பால் வசப்பட்ட மனிதன் அவன் பிறக்கும் போதே அவனால் அனுபவிக்கப்பட வேண்டியவை நிர்ணயிக்கப்பட்டுவிடுகின்றன. இது தவிர்க்க இயலா நிகழ்வுகள் என்றும் அழைக்கப்படும். இதனை மணிமேலை நூல்

பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும்

உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும்

பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும்

கருவில் பட்ட பொழுதே கலக்கும்

இன்பமும் துன்பமும் இவையும் அணு எனத் தகும்

முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது

மற்கலி நூலின் வகை இது' என்ன…………(மணிமேலை 27:159-162)

 

பேறு, இழப்பு, இடையூறு, உருமிடத்து எய்தல், துக்கம், சுகமுறுதல், அவற்றின் நீக்கம், பிறத்தல், சாதல் இந்நிகழ்வுகள் மனிதன் பிறக்கும்போதே நிர்ணயிக்கப்பட்டுவிட்டன. இவை ஆசீவக கோட்பாடுகள் அடங்கிய மற்கலி கோசாலரின் நூலில் இருந்ததாக பகவதி சூத்திரம் கூறுகின்றது என்பதனை பாசாம் அவரின் நூலில் எடுத்து கூறியுள்ளார். (A.L Bhasham, History and Doctrines of the Ajivikas)   

 

4.0 பூரணரின் வினை மறுப்பு கொள்கை அல்லது தற்செயல் கோட்பாடு

  புத்த நூல்களின் சாரத்தின்படி பூர்ண காசியபர் ஒரு மிகச் சிறந்த ஆசிரியர். இவர் பெயரின் முன்னொட்டான பூரண என்ற சொல்லில் இருந்தே இவர் பூர்ணத்துவம் பெற்றவர் என்பதனை அறியமுடிகின்றது. இவர் கர்மா என்ற கொள்கையின் மீது நம்பிக்கையற்றவர். வினைகள் அல்லது செயல்கள் என்று குறிப்பிடப்படும் அனைத்தும் வினைகளே அல்ல. அதேபோல் நற்செயல்கலும், தீச்செயல்களும் மூலம் எந்த வித விளைவுகளும் ஏற்படப்போவதில்லை என்று கூறுகின்றார். இதனால் தீங்கு என்ற ஒன்று ஏற்படுவது இல்லை. ஒரு செயல் செய்வதில் நன்மை தீமை என்று எதுவும் இல்லை. நன்மை செய்வதனால் உயர்வு என்ற ஒன்று ஏற்படப்போவதில்லை. தீமை செய்வதால் தாழ்வு என்ற ஒன்று ஏற்படப்போவதில்லை. ஒரு முறை அஜாதசத்ரு மன்னன் இவரைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது, ஒரு நற்செயலில் ஈடுபடுபவர் அல்லது ஒரு தீய செயலில் ஈடுபடுபவர் அல்லது ஒருவருக்கு துக்கத்தை அல்லது வேதனைய ல்லது தீங்கினை உண்டாக்குகின்றவர் அல்லது பிறருக்கு ஒரு நடுக்கத்தை ஏற்படுத்த செய்கின்றவர் அல்லது பிறரை நடுங்கச்செய்பவர், பிற உயிர்களைக் கொல்பவர், பிறர் கொடுக்காததை வீடுகளில் புகுந்து தானாக கொள்ளையடிக்கின்றவர், பொய் பேசுகின்றர், இவர்களுக்கு குற்ற மனம் ஏற்பட போவதில்லை. இதனால் அவர் சமூகத்தில் சமூகத் தகுதி குறைந்தவராக கருதப்படுவதும் இல்லை. பிறருக்கு தானம் இடுவதாலும், பல நற்செயல்கள் செய்வதாலும், கொடையளித்தலாலும், தன்னை உயர்ந்தவராக காட்டிக் கொள்வதனாலும், தன்னுடைய சுயத்தை கட்டுப்படுத்துவதனாலும், உண்மையை பேசுவதினாலும், ஒருவர் உயர்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ கருதப்படமட்டார் அல்லது அது அவரின் தகுதியை நிர்ணயிக்காது”. (Rhys Davis, Dialogues of the Buddha I p.69.) என கூறினார்.

ஜைன சுயகாத (Suyagada) நூல், பூரண காசியபர் பற்றி குறிப்பிடுகின்றது. இந்நூல் பூரண காசியபரை, அகரிய வாதியாக குறிப்பிடுகின்றது. கரியம் என்பது செயல்படாமல் இருத்தல் (No-Action) என்று குறிக்கப்படுகின்றது. மேலும் ஒரு செயலால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை ஏற்காமல் புறந்தள்ளுதல் என்பதே இதன் பொருளாக கொள்ளப்படுகின்றது.

சில ஆய்வாளர்கள் இவரின் கோட்பாட்டினை நிஷ்கரிய வாதமாகவும் காண்கின்றனர். நிஷ்கரியகரியவாதம் என்பது ஒருவர் செய்யும் நன்மை, தீமையால், அவரின் ஆன்மா என்பது பாதிக்கப்படாது. எனவே, ஆன்மா என்பது நன்மைக்கும் தீமைக்கும் அப்பாற்பட்டு முழுமை மற்றும் பூரணத்துவம் பெற்ற ஒன்றாக உள்ளது என கூறுகின்றனர். இவர் கர்மா, கர்மாவின் காரணம், கர்மாவின் விளைவு போன்ற கொள்களை மறுத்ததால் இவர் அகேதுகவாதியாகவும் குறிப்பிடப்படுகின்றார்.

சம்யுத்த நிகாயத்தில் புத்தர் குறிப்பிட்டுள்ள காரண காரிய தொடர்புக் கோட்பாட்டினை பூரண காசியபர் ஏற்கவில்லை. அபயத்தேவன் தன் நூலில், பானா எனப்படும் அறிவிற்க்கும் தஸ்ஸனா எனப்படும் நுண்ணறிவு அல்லது அக காட்சிக்கும் தொடர்பு உண்டு என்ற காரணத்தை பூரணர் ஏற்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரம்ம ஜால சூத்திரத்தில் பூரணர் ஆதிச்ச சமுப்தா எனப்படும் தற்செயல் கோட்பாடினையே ஏற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்குதாரா நிகாயத்தில் உலகாயுதத்தை வலியுறுத்தக்கூடிய இரண்டு பிராமணர்கள் புத்தரிடம் பூரணர் எல்லையற்ற அறிவின் மூலம் எல்லையற்ற உலகத்தை உணர்ந்ததாக கூறியுள்ளனர். மேலும் ஜைனர்களின் பரந்துபட்ட அறிவை வியந்தும் கூறியுள்ளனர். ஒரு சில இடங்களில் புத்தர் பூரணரை ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறந்தவர் மீண்டும் எவ்விடத்தில் பிறந்தார் என்று கூறும் ஆற்றல் பூரணருக்கு உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்”. எல்லாம் தானே தற்செயலாக நடப்பதால் அதை ஏற்பதாலும் இக்கோட்பாடு தற்செயல் கோட்பாடு என்றும் அழைக்கப்பட்டது.

4.1 பூரணரின் வண்ணக்கோட்பாடு

      இக்கோட்பாட்டினை தோற்றுவித்தவரும் பூரணரே, இக்கோட்பாடு அபிசாதிக் கோட்பாடு என்றும், லேசிய கோட்பாடு என்றும் அழைக்கப்படுகின்றது. அடிப்படையில் அபிசாதி கோட்பாட்டிற்க்கும் லேசிய கோட்பாட்டிற்க்கும் வேறுபாடு உண்டு, ஆனால் இவ்விரண்டையும் ஒன்றாகவே ஆய்வாளர்கள் காண்கின்றனர்.

லேசிய கோட்பாடனது மனிதர்களின் ஆன்மாவினையும் மக்களின் தொழில், அவர்களின் மனநிலையினை அடிப்படையாக கொண்டது. கால மாற்றத்திற்க்கு ஏற்ப மனிதர்கள் வண்ணப்படிநிலையில் எவ்வண்ணத்திலும் சேர்க்கப்படலாம், நிலை உயரும் போது ஒரு வண்ணத்திலும், நிலை தாழும் போது ஒரு வண்ணத்திலும் சேர்க்கப்படும். ஆனால் அபிச்சாதிக் கொள்கைப்படி பிறந்த ஒரு உயிரானது ஆறு அபிசாதி பிரிவுகளையும் கடந்தே வீடுபேறு அடைய வேண்டும். அபிசாதியும் வண்ணத்தை அடிப்படையாய் கொண்டதே.

ஜைன கோட்பாட்டின் படி ஆன்மா என்னும் பொருளுக்கு வண்ணம் தீட்டுவதே இதன் நோக்கம் ஆகும் இதன் மூலம் செம்மையற்ற ஆன்மா முதல் செம்மையான ஆன்மா வரை வண்ணங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. ஜைனத்தில் கூறப்பட்ட வண்ண கோட்பாட்டிற்க்கும் தமிழ் ஆசீவக வண்ண கோட்பாட்டிற்க்கும் பல நுண்ணிய வேறுபாடுகள் உண்டு.

ஜைன கோட்பாட்டின் படி ஆன்மா தூய்மையானது, படிகம் தனக்குள் செலுத்தப்படும் நூலின் வண்ணத்தை பிரதிபலிக்கவல்லது, அதுபோல் ஆன்மாவும் தான் சேரும் பொருள்களால் நிறம் அடைகின்றது. அது போல் இந்த ஆன்மா, மனிதனுக்கு மனிதன், அவர்களின் மனநிலைக்கு தக்க வேறுபடும்.

      உத்திரத்தியாயனா நூலின் 34 ஆம் அலகானது லேசிய கோட்பாட்டிற்கான அனைத்து சூத்திரங்களையும் கொண்டுள்ளது. லேசியம் என்பது ஆறு நிறங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 1. கருப்பு வண்ணம் 2. நீல வண்ணம் 3. சாம்பல் வண்ணம் 4. சிவப்பு வண்ணம் 5. மஞ்சள் வண்ணம் 6. வெள்ளை வண்ணம். இதன் விளக்கங்களை கீழே காணலாம்.

1. கருப்பு வண்ணம்:

      இது கிருஷ்ண லேசியை என அழைக்கப்படுகின்றது, இது ஒருவரின் கீழான மனநிலையை குறிக்க்ககூடியது ஆகும். இம்மனநிலையில் உள்ளவர்கள் இரக்ககுணம் அற்றவர்களாக காணப்படுவர். இவர்கள் போராட்டகுணம் மிக்கவர்கள், இவர்கள் பொறாமை குணம் மிக்கவர்களாக இருப்பர். இதனை உத்திரத்தியாயனா சூத்திரம்

      ”ஐந்து பாவங்களின் தூண்டுதலின் பேரில் தவறு செய்யும் ஒரு மனிதன் ஆறு வகையான உயிரினங்களையும் காயப்படுத்த தயங்காதவன், கொடூரமான செயல்கள் செய்பவன், துன்மார்க்கன், வன்முறை விளைவுகளுக்கு அஞ்சாதவன், புலன்களை அடக்கி ஆள இயலாதவன்.”(உத்திரத்தியாயனா சூத்திரம் 34.21:22) என குறிப்பிடுகின்றது.

2. நீல வண்ணம்   

      இது நீல லேசியை என அழைக்கப்படுகின்றது. பெருமை, கர்வம், சோம்பேறித்தனம் உடையவர்கள் நம்பகத்தன்மையற்றவர்கள், ஏமாற்றுக்காரர்கள், கோழைகள் மற்றும் நயவஞ்சகர்கள். இவர்கள் மதம் சார்ந்த அனைத்தையும் தவிர்ப்போர், இந்நிறத்தின் கீழ் வருவர். இதனை உத்திரத்தியாயனா சூத்திரம்

பொறாமை, கோபம், தன்னடக்கமின்மை, அறியாமை, வஞ்சகம், அடக்கமின்மை, பேராசை, வெறுப்பு, துன்மார்க்கம், கவனக்குறைவு, இன்பத்தை விரும்புதல்; இன்பங்களைத் தொடர்ந்தும் மற்றும் பாவச் செயல்களில் இருந்து விலகாத ஒரு மனிதன், பொல்லாதவன் மற்றும் வன்முறையில் இருப்பவன்இந்நிறத்தின் கீழ் வருவர். (உத்திரத்தியாயனா சூத்திரம் 34.23:24)

3. சாம்பல் வண்ணம்

     இது சாம்பல் லேசியை என அழைக்கப்படுகின்றது, இவர்கள் எப்போதும் சோகமாகவும் வாடியும் இருப்பார்.  அவர்கள் மற்றவர்களின் தவறுகளைக் கண்டுபிடித்து பழிவாங்குவர்.  வர்கள் தங்களைப் பற்றி பெருமிதம் கொள்பாராக இருப்பர், ஆனால் சிறிய விஷயங்களின் மூலம் ஆனந்தம் அடைவார்கள், மன சமநிலை இல்லாமல் இருப்பார்கள். இதனை உத்திரத்தியாயனா சூத்திரம்

 வார்த்தைகளிலும் செயல்களிலும் நேர்மையற்றவர், கீழ்த்தரமானவர், நேர்மையற்றவர், துண்டிப்பவர் மற்றும் ஏமாற்றுபவர், மதவெறியர், இழிவானவர், புண்படுத்தும் மற்றும் பாவமான விஷயங்களைப் பேசுபவர், திருடன் மற்றும் பொறாமை கொண்டவர்கள்” இந்நிறத்தின் கீழ் வருவர்.” (உத்திரத்தியாயனா சூத்திரம் 34.25:26). என குறிப்பிடுகின்றது.

4. சிவப்பு வண்ணம்

      இது சிவப்பு லேசியை என அழைக்கப்படுகின்றது, இவ்வகை மனிதர்கள் தனது செயல்பாடுகளில் உள்ள நன்மையையும் தீமையையும் பிறித்து அறியக்கூடியவர்கள். எது சரி எது தவறு என்று பகுத்து அறியக்கூடியவர்களாக இருப்பர். அன்பானவர்கள், கருணையுள்ளவர்கள், மதம் மற்றும் இணக்கமான வாழ்க்கையை நடத்துபவர்களாக இருப்பர். இதனை உத்திரத்தியாயனா சூத்திரம்

 அடக்கமும், உறுதியும், வஞ்சகமும் இல்லாத, நல்ல ஒழுக்கமும், கட்டுப்பாடும், படிப்பிலும், கடமைகளிலும் கவனம் செலுத்துபவர்கள், சட்டத்தை விரும்பி, அதைக் கடைப்பிடிப்பவர்கள், தடை செய்யப்பட்ட விஷயங்களுக்குப் பயந்து, உயர்ந்த நன்மைக்காகப் பாடுபடுபவர்கள்” இந்நிறத்தின் கீழ் வருவர் (உத்திரத்தியாயனா சூத்திரம் 34.27:28). என குறிப்பிடுகின்றது.

5. மஞ்சள் வண்ணம்

      இது மஞ்சள் லேசியை என அழைக்கப்படுகின்றது, இவ்வகை மனிதர்கள் கருணையுள்ளம் கொண்டவர்கள் மற்றும் அனைவரையும் மன்னிப்பார், அவர்களின் எதிரிகளையும் கூட. அவர்கள் வாழ் நாளில்  சில விரதம் கடைப்பிடிப்பர், தங்கள் கடைசி மூச்சு வரை தங்கள் சபதங்களைக் கடைப்பிடிப்பதில் விழிப்புடன் இருப்பர். அவர்கள் மகிழ்ச்சி மற்றும் துக்கங்களால் பாதிக்கப்படாமல் இருப்பர். இதனை உத்திரத்தியாயனா சூத்திரம்

  கோபம், அகங்காரம், வஞ்சகம், பேராசை ஆகியவை இல்லாத, மனம் நிம்மதியாக இருக்கும், தன்னைக் கட்டுப்படுத்தி, படிப்பிலும் கடமையிலும் கவனம் செலுத்துபவன், கொஞ்சம் பேசுபவன், அமைதியாக, தன் புலன்களை அடக்கியாளும் மனிதன்இந்நிறத்தின் கீழ் வருவர் (உத்திரத்தியாயனா சூத்திரம் 34.29:30). என குறிப்பிடுகின்றது.

6. வெள்ளை வண்ணம்:

      இது வெள்ளை லேசியை என அழைக்கப்படுகின்றது. இந்த மனநிலையானது சமணக் கொள்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்கும் ஒருவரைக் குறிக்கிறது. அவர்கள் நம்பகமானவர்கள், ஒவ்வொருவரையும் தன் போல் பாவிப்பர்,  தங்கள் எதிரிகளின் மேல் வன்மம் இல்லாதவர், யார் தவறு செய்தாலும் அவர்கள் அதனை பொறுத்துக்கொண்டு அமைதியாக இருப்பர். இந்த மனநிலையை முழுமைப்படுத்தியவர்கள் தூய்மையாகி, இறந்தவுடன் வாழ்க்கை மற்றும் பிறப்பு சுழற்சியில் இருந்து தப்புவார்கள். இதனை உத்திரத்தியாயனா சூத்திரம்

ஒரு மனிதன் தனது துன்பத்தைப் பற்றியும் பாவச் செயல்களைப் பற்றியும் தொடர்ந்து சிந்திக்காமல்,  உண்மையாக தியானத்தில் ஈடுபடுபவர், மனம் நிம்மதியடைவர், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவர், நியதிகளை கடைப்பிடிப்பவர், அவர் மோகத்திற்கு ஆளாகாமல் உணர்ச்சியிலிருந்து விடுபட்டவர், அமைதியானவர், மற்றும் தனது புலன்களை அடக்குகிறார்-அத்தகைய பழக்கவழக்கங்களைக் கொண்ட ஒரு மனிதன் இந்நிறத்தின் கீழ் வருவர். (உத்திரத்தியாயனா சூத்திரம் 34.31:32) என குறிப்பிடுகின்றது.

மேலும், இக்கோட்பாட்டினை விளக்க உவமை கதை ஒன்றும் கூறப்படுகின்றது.

      ஆறு திசைபோக்கர்களும், ஒரு நாள் காட்டு வழியில் பயணம் செல்லும் போது ஒரு பழம் தரும் மரத்தை காண்கின்றனர். அம்மரத்தின் பழங்களை அவ்வறுவரும் அடைய எண்ணினர். அவர்களில் முதலாமவர் அம்மரத்தினை வேரோடு பிடுங்கி பழங்களை உண்ணுமாறு அறிவுறுத்துகின்றார். இரண்டாமவர் அம்மரத்தின் தண்டு பகுதியை வெட்டிவிட அறிவுறுத்துகின்றார். மூன்றாமவரும், நான்காமவரும் அம்மரத்தின் கிளைகளை மட்டும் வெட்ட அறிவுறுத்துகின்றனர். ஐந்தாமவர் பழங்களை மட்டுமே பறிக்க அறிவுறுத்துகின்றார். ஆறாமவர் கீழே விழுந்த பழங்களை மட்டுமே எடுக்க அறிவுறுத்துகின்றார். இந்த ஆறு பயணிகளில் ஒவ்வொருவரின் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் மன இயல்புகள் வெவ்வேறானவை. முதலாமவர் ஒரு பழத்திற்காக அம்மரத்தினை வேரோடு பிடுங்கி பழங்களை உண்ணுமாறு அறிவுறுத்துகின்றவர் எனவே அவர் கிருஷ்ண லேசியை சார்ந்தவர் ஆவார். இரண்டாமவர் நீல லேசியை சார்ந்தவர் ஆவார். முறையே மூன்றாமவர் மற்றும் நான்காமவர் சாம்பல் நிற லேசியையும் சிவப்பு நிற லேசியையும் சார்ந்தவர்கள் ஆவார். பழங்களை மட்டுமே பறிக்க எண்ணிய ஐந்தாமவர் மஞ்சள் நிற லேசியை சார்ந்தவர் ஆவார். கீழே விழுந்த பழங்களை மட்டுமே எடுக்க அறிவுறுத்திய ஆறாமவர் வெள்ளை நிற லேசியை சார்ந்தவர் ஆவார்.   

மேற்குறிப்பிட்ட இக்கருத்துக்களில் இருந்து நுண்ணிய வேறுபாட்டுடன் தமிழக ஆசீவக வண்ணக்கோட்பாடு காணப்படுகின்றது.

மேற்கூறிய கோட்பாடானது தமிழகத்தில் உருவாக்கப்பட்டது. பசுமை வண்ணமும் கழி வெண்பிறப்பும் சேர்ந்து உருவாக்கப்பட்டது தான் இக்கோட்பாடு ஆனால் இக் கோட்பாட்டினை பின்பற்றத் தொடங்கிய ஜைனர்கள் இதன் சாரத்தை அறியாது, பொன் வண்ணத்தினை மஞ்சள் நிறமாக மாற்றியும், பசுமை வண்ணத்தை நீக்கியும் அதற்கு பதிலாக சாம்பல் நிறத்தை சேர்த்தும், கழி வெண்பிறப்பு பற்றி அதிகம் பேசாமலும் இக்கோட்பாடை தங்களுக்கானதாக மாற்றி அமைத்தனர்.  

பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும்

பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்

என்று இவ் ஆறு பிறப்பினும் மேவி

பண்புறு வரிசையின் பாற்பட்டுப் பிறந்தோர்

கழி வெண் பிறப்பில் கலந்து வீடு அணைகுவர் (மணிமேகலை 27:160)

 

வெண்மைநன் பொன்மை செம்மை நீல்கழி வெண்மை பச்சை 

உண்மையிவ் வாறின் உள்ளும் கழிவெண்மை ஓங்கு வீட்டின் 

வண்மைய தாகச் சேரும் மற்றவை உருவம் பற்றி 

உண்மையவ் வொட்டுத்தீட்டுக் கலப்பினில் உணரும் என்றான். (சிவ ஞானசித்தியார்-172)

 

தமிழ் நூல்களில், மணிமேகலை நூலும், சிவ ஞான சித்தியார் நூலும் இக்கோட்பாட்டினை தெளிவுற கூறுகின்றன.

1.  கழிவெண்நிலை,

2.  வெள்ளைநிலை

3.  பொன் நிலை

4.  சிவப்பு நிலை

5.  பச்சைநிலை,

6.  கரு நீல நிலை

7.  கருப்பு நிலை

 

ஆசீவகத்தின் உயர்ந்த நிலை கழி வெண்பிறப்பு அல்லது கழி வெண்நிலை ஏழாவது படியான வெண்ணிலையை அல்லது வெள்ளைநிற நிலையை கடந்தவர்களே அல்லது கழிந்தவர்களே பரிநிர்வாண நிலையை அடைவர் அவ்வாறு அடைந்தவர்களில்  முக்கிய மூவர் .கோசாலர், பூரணர், நந்தாசிரியன் ஆவார்.

இந்நிலைக்கு கீழ் தான் வெள்ளை நிலை வரும் அதில் ஆசீவகர்களும்,  ஆசீவகனிகளும் வருவர்,  பெண் துறவிகளான ஆசீவகனிகளுக்கு மாதங்கி என்றொறு பெயருமுண்டு. இதற்கு கீழ் பொன் நிலை வரும். இதற்கு கீழ் நிலை சிவப்பு வண்ண நிலை ஆகும் சிவப்பு வண்ண நிலையில் நிர்கந்தர்கள் அடங்குவர். நிர்கந்தர்கள் ஒற்றை வண்ண ஆடையை மட்டுமே அணிவர் அந்த ஒற்றை வண்ணம் சிவப்பு ஆகும். இதற்கு கீழ் நிலை பச்சை நிலை இதில் வீட்டில் உள்ளோரும், ஆசீலகர்களும் அடங்குவர். இதற்கும் கீழ் நிலை நீல வண்ணம் ஆகும், திருட்டு வாழ்வினை மேற்கொண்ட புத்தபிக்குகளும் இதில் அடங்குவர் மேலும் கர்மா என்ற ஒன்று உண்டு என்பதனை நம்புவோர்களும் இந்நிலையில் அடங்குவர். இறுதியாக கருப்பு வண்ண நிலை ஆகும், தொடக்க நிலையில் ஆசீவகத்தை ஏற்போர்,  ஆசீவத்தை ஏற்று கடுந்தொழில் புரிவோரான வேடர்கள், கள்வர்கள், காவல் காப்போர் என மனதளவில் செம்மை அடையாதோரும், பக்குவப்படாதோரும் இந்நிலையில் அடங்குவர்.

வீடுபேறு அடையும் நெறி:

பண்புறு வரிசையின் பாற்பட்டுப் பிறந்தோர்

கழி வெண் பிறப்பில் கலந்து வீடு அணைகுவர்

அழியல் வேண்டார் அது உறற்பாலார்

இது செம்போக்கின் இயல்பு இது தப்பும்

அது மண்டலம் என்று அறியல் வேண்டும் (மணிமேகலை 27:160)

 

ஆசீவகர்கள் வீடுபேறு அடைவதற்க்கு இருவகையான நெறியை பின்பற்றுவதாக மணிமேகலை நூல் கூறுகின்றது. அந்நெறியானது ஒன்று மண்டல நெறியாகும் மற்றொன்று செம்போதக நெறியாகும்.

உலகில் உயிர்கள் நியதியின் வழி வீடுபேறு அடையும். மண்டல நெறியடைந்தவர்கள் மீண்டும் பிறப்பு எடுக்க கூடியவர்கள். செம்போதக நெறியடைந்தவர்கள் மீண்டும் இவ்வுலக பிறப்பினை எய்தாதவர்கள். ஆசீவகர்கள் கொள்கைப்படி இவ்வுலகில் இருக்கும் பல விடயங்கள் நிலைபேறானவை. புதிதாக எந்த உயிரும் தோன்றுவதில்லை, இருந்த உயிர்கள் அழிவதில்லை. இவர்கள் கொள்கைப்படி அணுவில் கூட மாற்றம் ஏற்படுவதில்லை.    


5.0 நரிவெரூஉத்தலையாரின் பொருள் ­முதல்வாதமும், உத்தேசவாதமும்

அஜிதகேசகம்பாளி என்று வட நாட்டு தத்துவ வாதிகளால் அழைக்கப்பெற்றவர்தான் நரிவெரூஉத்தலையார் என்று நமக்கு அடையாளப்படுத்தியவர் முனைவர் க. நெடுஞ்செழியன் ஆவார். அஜித என்பது நரியையும் கேசம் என்பது தலை மயிரினையும், கம்பாளி என்பது உடுத்தியவர் என்ற பொருளிலும் எடுத்தாளப்படுகின்றது. நரி என்பது அவரின் குலக் குறியாகும் தலை மயிரினை ஆடையாக உடுத்திய நரி மகன் என சுட்டப்படுகின்றார். அஜிதம் என்றால் வாதத்தில் வீழ்த்த முடியாதவர் என்ற பொருளும் உண்டு.

அஜிதகேசகம்பாளி ஆசீவகர் தான் என்பதற்க்கு அவர் பெயரே சான்று ஆகும். சமணர் என்போர் ஆசீவகர்களே, சமணரையும் ஜைனரயும் வேறுபடுத்தி அறிய உதவும் ஒரு காரணி தான் இந்த தலை மயிர் ஆகும்.

ஜைனர்கள் தலைமுடி வளர்ப்பதை விரும்பாதவர்கள், எனவே அவர்கள் லோசம் செய்து தலை மயிரினை தங்கள் கைகளினாலேயே பிடுங்கி எடுப்பர்.

ஆனால் ஆசீவகர்கள் அப்படி அல்ல அதற்கு நேர் எதிராக தலை முடியை வளர்க்க கூடியவர்கள், எனவே தான் ஆசீவக முன்னோர்கள் நீண்ட சடைமுடி தரித்தவர்களாக இருந்தனர். கொண்டை முடி வனைதலும் காது வளர்த்தலும் ஆசீவகர்களின் தொன்றுதொட்ட மரபு. பல ஆதி கால (கி.பி. 15 ஆம் நூற்றாண்டு வரை) ஐய்யனார் சிலைகள் சடைமுடி தரித்தே காணப்படும்.  

ஜைன மரபில் ஆதிநாதரைத் தவிற மற்ற தீர்த்தங்கர்களுக்கு தலை மயிர் இருக்காது. இதனை திருக்கலம்பக நூல் எடுத்தியம்புகின்றது.

இனி நாம் நரிவெரூஉத்தலையாரின் கோட்பாடுகளைக் காண்போம். இவரின் 4 பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் உள்ளன. அவை குறுந்தொகை 5ஆம் பாடலும், 236ஆம் பாடலும், புறநானூறு 5ஆம் பாடலும் , 1955ஆம் பாடலும் கும்.

 இவர் உருவாக்கிய கோட்பாடுகளாவன

1.பொருள்முதல்வாதம்

2.உத்தேசவாதம்

3.ஜீவ சரீர வாதம்    

பிரம்ம ஜால சூத்திரம் இவரின் உத்தேச வாதம் பற்றியும், ஜீவ சரீர வாதம் பற்றியும் பேசுகின்றன.

பொருள்முதல்வாதம்:

      இந்தியாவில் முதன் முதலில் பொருள் முதல்வாத கோட்பாடை முன்வைத்தவர் இவரே, இவர் தான் சார்வக தத்துவப் பள்ளியின் முன்னோடி ஆவார். உலகாயுத தத்துவப் பள்ளியும் இவர் கற்பித்த கொள்கைகளில் இருந்தே உருவாக்கப்பட்டது. இவர் கற்பித்த கோட்பாடு நூல்கள் இன்று இல்லை, இவரை எதிர்த்து வாதம் செய்தோர் கொடுத்த மேற்கோள்களின் அடிப்படையிலே இவரது தத்துவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன, சார்வக பள்ளியில் இவரது அவ்வாறு தொகுக்கப்பட்ட கோட்பாடுகள் உண்டு.

உத்தேசவாதம்:

  புத்த குறிப்புகளின் படி,”தானம் செய்வது, பலியிடுவது, கொடையளிப்பதால் எதுவும் நிகழப்போவதில்லை.  ன்மை  தீமைகளினால் எவ்வித பலனும் இல்லை. மனிதன் நான்கு வித கூறுகளால் ஆக்கப்பட்டிருகின்றான். இறந்தவுடன் அடுத்த உலகத்திற்கு மனிதன் போவதில்லை. இறப்புக்கு பின் வாழ்க்கையில்லை. அந்த நான்கு கூறுகளும் அவன் இறந்த பொழுது இந்த பூவெளியில் உள்ள நான்கு கூறுகளுடன் இணைந்து விடுகின்றன. உடலில் உள்ள நீர்மம், நீருடனும், வெப்பம் தீயுடனும், மூச்சு காற்றுடனும் மற்ற கூறுகள் மண்ணுடனும் இணைந்துவிடுகின்றன. இந்த இறந்த உடலை சுமக்கும் அந்த நான்கு கால்கள் என்பது ஐந்தாம் கூறு ஆகும். இறந்த உடல் எரிமேடை செல்லும் வரை மற்றவர்களால் புறங்கூறப்படும் அல்லது புகழப்படும். புலன் உணர்வுகள் அண்ட வெளியுடன் இணைந்து விடுகின்றது. எரியூட்டப்பட்ட உடலின் சாம்பலுக்கு பூசனைகள் செய்வது முட்டாள்களின் கோட்பாடு ஆகும். இறந்த உயிர் பிறப்பதில்லை என்பது இவர் கோட்பாடு ஆகும். முட்டாள்களாயினும், புத்திசாலிகளாயினும் மரணம் ஒன்று தான் இறந்த பிறகு அவர்கள் இல்லை. என்பது இவரின் உத்தேச வாதம் ஆகும்.

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,

அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்

எல்லாரும் உவப்பது; அன்றியும்,

நல் ஆற்றுப் படூஉம் நெறியும்மார் அதுவே.(195)

ஜீவ சரீர வாதம்:  

      இக்கோட்பாடானது உடல், ஆன்மா இவ்விரண்டையும் ஒன்றாக காண்கின்றது. உடல் வேறு ஆன்மா வேறு அல்ல. ஆன்மா நிலையானதும் அல்ல உடல் நிலையானதும் அல்ல. உடலையும் ஆன்மாவினையும் வேறுபடுத்தி அடையாளாம் காணாது இவ்விரண்டும் ஒன்றே கூறுவது இதன் வாதம். இறந்த பின் உயிரும் இல்லை ஆன்மாவும் இல்லை என்பதே இக்கோட்பாட்டின் முக்கிய நோக்கம் ஆகும்.

      டி.டி கோசாம்பி அவர்கள் அஜிதரை முழுமையான முதற்பொருள்வாதி என்றே குறிப்பிடுகின்றார். டி.டி கோசாம்பி அவர்கள் கூற்றுப்படி, ”அவர் முழுமையான முதற்பொருள் வாதத்தினை கற்பித்தார். நற்செயல்களாலும், பிறர்க்கு செய்யும் தொண்டுகளாலும் ஒரு மனிதனுக்கு இறுதியில் விளையப்போவது ஒன்றுமில்லை, இறப்பிற்க்கு பின் முதன்மை கூறுகள் இந்த உலகத்தோடு கரைந்துபோகின்றன. ஒருவன் பெற்றதும் பெறாததும் என்று ஒன்று இல்லை, எதுவும் மிஞ்சப்போவதில்லை, மனிதன் விதி என்பது நன்மை, தீமை, அறம், இரக்கம், போன்ற கருத்தியல்களுக்கு பொருந்தாதவை என கூறுகின்றார்.


6.0 பக்குடுக்கை நன்கணியாரின் நிலைப்பேறும் அணுக்கோட்பாடும்

மகாவீரர், புத்தரின் சமகாலத்தில் வாழ்ந்த ஆசிரியர் இவ்விருவருக்கும் முத்தோரான பகுத கச்சாயனர் என வடமொழியில் அழைக்கப்பெறும் பக்குடுக்கை நன்கணியார் தான் அணுவிற்கான அளவையியலை உருவாக்கினார். பாலி மொழியில் இயற்றப்பட்ட சூத்திரம் ஒன்று இவரை ககுத கச்சாயான என குறிப்பிடுகின்றது. பகுத கச்சாயனர் தான் பக்குடுக்கை நன்கணியார் என்பதனை முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள் ”தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம் என்ற நூலில் நிறுவியுள்ளார். சங்கப்பாடல்களில் அவர் எழுதிய அணுக்கோட்பாடனது உள்ளது மேலும் நீலகேசி, மணிமேகலை, சிவஞான சித்தியார் போன்ற நூல்கள் இவரின் கருத்தியலோடு ஒத்துப்போகின்றன. இவரின் கோட்பாடுகளே வைசேடிகத்திற்கு முன்னோடி, இவரின் கோட்பாடுகளே வைசேடிகம் நூலாக வடமொழியில் உருவாயிற்று.

      இவர் உருவாக்கிய கோட்பாடு நிலைப்பேறு கோட்பாடு (Eternalism) கோட்பாடானது கடவுள் மறுப்பையும், இவ்வுலகியல் இயல்பு பற்றியும் பேசுகின்றது. இக்கோட்பாடு சாஸ்சதவாத கோட்பாடு என்றும் அழைக்கப்படுகின்றது. இதற்கு ஒருமையியம் என்ற பெயரும் உண்டு. பொருண்மை, இன்பம், துன்பம், இவ்வணுக்கள் நிலையானவை, இவை ஒன்றொடு ஒன்று புணராது, இவாறாக அணுவின் இயல்பு, சேர்க்கை, பற்றி பேசுவதால் இது அணுகோட்பாடு (Atomic Theory) என்றும் அழைக்கப்படுகின்றன.   

பிரம்ம ஜால சூத்திரமானது இவரின் கோட்பாடுகளை அணுகோட்பாடு என்றும் நிலைபேறு கோட்பாடு என்றும் அடையாளப்படுத்துகின்றன.  

தமிழில் உள்ள பக்குடுக்கை நன்கணியாரின் பாடலை கீழே காணலாம்,

ஓரி னெய்தல் கறங்க வோரில்

ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்

புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்

பைத லுண்கண் பனிவார் புறைப்பப்

படைத்தோன் மன்றவப் பண்பி லாளன்

இன்னா தம்மவிவ் வுலகம்

இனிய காண்கித னியல்புணர்ந் தோரே. (புறம்;194)

மேற்கூறிய பாடலின் பொருளாவது, ஒரு மனையின்கண் சாக்காட்டுப் பறையொலிக்கும்போது, ஒரு மனையின்கண்ணே திருமணத்திற்குக்கு முழவு ஒலிக்கும், ஒரு வீட்டில் தலைவன் தலைவி கூடி மகிழ மற்றொரு வீட்டில் தலைவனை பிரிந்த தலைவி கண்கள் நீர் வார்ந்து துளிக்க, இவாறாக ஒத்து, ஒவ்வாமை என இருவேறுபட்ட பண்புடைய உலகை படைத்துவிட்டான் பண்பிலாளன். இவ்வுலகம் இயற்கை கொடிது, ஆதலால் இவ்வுலகினது தன்மை றிந்தோர் வீட்டின்பத்தைத் தரும் நல்ல செய்கைகளை அறிந்து செய்து கொள்க என்பதே இதன் பொருள். இப்பாடல் ”பிறர்தம் மதமேற் கொண்டு களைவே” என்னும் நன்னூலாரின் பாடலினை மேற்கோள் காட்டி ”பிறன் கோட் கோறல்” என்னும் உத்தியில் உள்ளதாக முனைவர் க. நெடுஞ்செழியன் கூறுகின்றார். 

      ஒத்து, ஒவ்வாமை என இருவேறுபட்ட பண்புடைய உலகை படைத்துவிட்டான் பண்பிலாளன் என்பது மூலம் தனது கடவுள் மறுப்புக்கு வித்திடுகின்றார். பக்குடுக்கை நன்கணியார். இவ்வுலகம் துன்பம் நிறைந்தது, ஆதலால் இவ்வுலகினது தன்மை றிந்தோர் அத்துன்பங்களினுடே இன்பதை துய்க்க முயல்வீர் என தன் நிலைப்பேறினை தெளிவாக எடுத்தியம்புகின்றார்.

அணுக்கோட்பாடு:

இவரின் கூற்றுப்படி இந்த உலகத்தில் ஏழு கூறுகள் அழிவில்லாதவை.

1.    நிலம், 2. நீர், 3.காற்று, 4.நெருப்பு 5.வளி, 6. இன்பம், துன்பம் 7.உயிர் (ஆன்மா, வாழ்வு)

இக்கூறுகளை உருவாக்க முடியாது, இதன் அளவினை கூட்டவோ குறைக்கவோ முடியாது, இவை இயற்கையாய் உருவானவை. இவை மாமுகட்டின் சிகரங்கள் போல் வீற்றிருப்பவை. தூண் போல் உறுதியாய் நிற்பவை, இவைகளுக்கு பதிலீடுகள் கிடையாது, இவற்றுடன் இடைவினை புரிதல் இயலாது. இவைகள் ஒன்றுடன் ஒன்று இடைவினை புரியாது. ஒருவரின் இன்பத்தையும் துன்பத்தையும் அவர்தான் அனுபவிக்க வேண்டும் பிறரால் ஏற்க இயலாது. ஒன்று மற்றவைகளின் இடத்தை கொள்ளாது. இவைகளை எவராலும் அழிக்க முடியாது. 

நிலம், நெருப்பு, நீர், காற்று, வெளி இவ்வைந்தும் நிலைத்தவை நிலைத்த தன்மை உடையன. இவ்வைந்தும் புணராது. இந்த ஐந்து கூறுகளும் ஐம்பூத கோட்பாடு என தமிழகத்தில் அழைக்கப்படுகின்றன. வட நாட்டில் காற்றுக்கும் ஆகாயத்திற்கும் வேறுபாடு அறியாததால் நான்கு கோட்பாடுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. இதில் உயிர், இன்பம், துன்பம் பின்னாளில் சேர்க்கப்பட்டவை. இவரால் உருவாக்கபட்ட அணுவியமே உலகின் முதல் அணுவிய கோட்பாடு ஆகும், அதை சமண்ண பால சூத்திரமும் உறுதி செய்கிறது.

 ஆனால் கிரேக்கத்தில் இதே சம கால அளவில் லுசிபஸ், டெமோக்ரெட்டஸ் ஆகியோர் அணு கோட்பாட்டினை வெளியிட்டனர். ஆனால் இவர்களின் கோட்பாடு ஆசீவக அணு தத்துவத்தையும், 8 மகா நிமித்தங்களையும், மக்கா என்னும் உறுதிப் பொருட்களையும் இணைத்து குழப்பி வெளியிட்டது போன்றே காணப்படுகின்றன. கசப்பு சுவை உடைய பொருளை உண்ணும் போது நாக்கின் மேல சிறிய வட்ட வடிவமான குறைந்த அளவுடைய அணுக்கள் கடந்து செல்வதால் தான் கசப்பு சுவை ஏற்படுகிறது என்று கூறினர். மேலும் கிரேக்கர்கள், நிலம், தீ, நீர், வளி இந்நான்கும் அணு என வரையறை செய்துள்ளனர். இதையெல்லாம் கணக்கில் கொண்டால், தமிழகத்திலிருந்து அணு கோட்பாடு கிரேக்கம் சென்றிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.   

   நமது தென்னிந்திய ஆசீவகம்  ஐம்பூத கோட்பாடுகளைக் கொண்டது. அவை அணு (காயம்) அல்லது பொருள் என்றே அழைக்கப்படுகின்றன. இங்கு உயிர் என அழைக்கப்படும் பொருளானது சிவம் எனவும் அழைக்கப்படும். நீலகேசியில் ஆசீவகவாத சருக்கம் பூதங்களினை ஐந்து என்றே உறுதிகூறுகின்றது.

      முனைவர். ர. விஜயலட்சுமி அவர்களின் ஆய்வுப்படி மக்கலி கோசாலர் கூறும் ஆசீவக கொள்கைகளை எடுத்துரைக்கும் புத்த நூல்களும் ஜைன நூல்களும் அணுக்கள் பற்றி எதுவும் கூறவில்லை” என்றே கூறுகின்றார். பின்னாளில் ஜைனத்தில் ஏற்கப்பட்ட இக் கோட்பாட்டில் காற்றுக்கும் ஆகாயத்திற்கும் வேறுபாடு அறியாததால் அணு நான்கு கூறுகளை உடைய கோட்பாடு என்றே கூறப்பட்டு வருகின்றது.

தமிழ் நூல்களில் உள்ள அணு கோட்பாடு:

      தமிழ் நூல்களான மணிமேகலை நீலகேசி, சிவஞான சித்தியார் போன்ற நூல்கள் ஆசீவகரின் ணு கொள்கைகள் பற்றி எடுத்துரைக்கின்றன. கீழ்காணும் பாடல்கள் ஆசீவக வாத சருக்கத்தில் காணப்படுகின்றன. நிலம், நீர், தீ, காற்று, உயிர், என்ற இந்த ஐந்து அணுக்களும் எல்லா பொருட்களிலும் உள்ளன என்பதை இந்நூல்கள் கூறுகின்றன. இவை தவிர  மணிமேகலை, இன்ப, துன்பத்தையும்  அணுக்களாக சேர்த்து கூறுகின்றது, அதே போல சிவஞான சித்தியார் புண்ணியம், பாவம் என்ற இரண்டினையும் அணுக்களாக சேர்த்து கூறுகின்றது.

புல்லிக் கிடந்து புலப்படுகின்ற

வரம்பு இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து

உரம் தரும் உயிரோடு ஒரு நால் வகை அணு

அவ் அணு உற்றும் கண்டும் உணர்ந்திடப்

பெய் வகை கூடிப் பிரிவதும் செய்யும்

நிலம் நீர் தீ காற்று என நால் வகையின

மலை மரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும்

வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும்

அவ் வகை அறிவது உயிர் எனப் படுமே

வற்பம் ஆகி உறும் நிலம் தாழ்ந்து

 

சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய்

இழினென நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீத்

தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம்

காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை

வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால்

ஆதி இல்லாப் பரமாணுக்கள்

தீதுற்று யாவதும் சிதைவது செய்யா

புதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா

முது நீர் அணு நில அணுவாய்த் திரியா

ஒன்று இரண்டாகிப் பிளப்பதும் செய்யா

 

அன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யா

உலாவும் தாழும் உயர்வதும் செய்யும்

குலாம் மலை பிறவாக் கூடும் பலவும்

பின்னையும் பிரிந்து தம் தன்மைய ஆகும்

மன்னிய வயிரமாய்ச் செறிந்து வற்பமும் ஆம்

வேய் ஆய்த் துளைபடும் பொருளா முளைக்கும்

தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம்

நிறைந்த இவ் அணுக்கள் பூதமாய் நிகழின்

குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின்

ஒன்று முக்கால் அரை கால் ஆய் உறும்

 

துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே

இக் குணத்து அடைந்தால் அல்லது நிலன் ஆய்ச்

சிக்கென்பதுவும் நீராய் இழிவதும்

தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும்

ஆய தொழிலை அடைந்திடமாட்டா

ஓர் அணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர்

தேரார் பூதத் திரட்சியுள் ஏனோர்

மாலைப் போதில் ஒரு மயிர் அறியார்

சாலத் திரள் மயிர் தோற்றுதல் சாலும் (மணிமேகலை 27)

      உலகில் நிலையானவை அணுக்கள் என்றும் அவற்றினுக்கு அழிவு இல்லை என்றும், அது போல புதிய அணுக்கள் தோன்றுவது இல்லை என்றும் பழைய அணுக்கள் கழிவதும் இல்லை என்றும் சிவஞான சித்தியார் நூல் எடுத்துரைக்கின்றது.

உணர்தரா அணுக்கள் நான்கும் ஒன்றுகெட் டொன்ற தாகா

புணர்தரா ஒன்றில் புக்கொன் றாயினும் பொருந்தி வாழும்

அணைதரா புதிய வந்திங் கழிதரா பழைய வான

இணைதரா ஒன்றொன் றாகி மாறுதல் ஒன்றும் இன்றே. (சிவஞான) 

     அணுக்கள் ஊழ் என்னும் ஆற்றலால் எண்ணிக்கை அளவில் நிலைப்படுத்தப்ப்படுகின்றன என்றும், அது போல இவணுக்ள் மானிடரின் கண்களுக்கு புலனாகாது என்றும் பிறரால் அதை உணர மட்டுமே முடியும் என்றும் இந்நூல் கூறுகிறது. ஒரு திரளான அணு கண்ணுக்கு புலப்படும், ஆனால் ஒரு தனி அணு கண்ணுக்கு புலப்படுவதில்லை என்பதை மணிமேகலை நூல் கூறுகின்றது. இதே கருத்தைத் தான் கிரேக்க அறிஞர் டெமாக்ரெட்டஸ்ம் கூறியுள்ளார்.

அணுக்களுக்கு பொதுப்பண்புகளும் சிறப்பு பண்புகளும் உள்ளதாக, நீலகேசி, மணிமேகலை, சிவஞான சித்தியார் நூல்கள் கூறுகின்றன. பொதுப் பண்புகள் படி அவை ஒன்றுடன் ஒன்று கூடி பின்னர் வேண்டியபோது பிரியும், இப்பண்பிணையே நீலகேசி குழுவும் பிரியும் என்று எடுத்துரைக்கின்றது.

 பொருட்களின் உருவாக்கம் அணுக்களின்னாலேயே ஏற்படுகின்றது என்றும், அதேபோல் ஒரு அணு இன்னொரு அணுவாக மாற்றம் பெறாது என்றும், அதேபோல் அணுக்கள் புணரும்போது ஒன்றனுள் ஒன்று உட்புகுவதில்லை. என்றும், மணிமேகலை எடுத்துரைக்கின்றது. அணுக்கள் ஒன்று சேர்ந்து ஒரு வலிமை உடைய பொருளாக மாற்றம் பெறுகின்றன என்பதனையும், பின்னர் அப்பொருள் சிதையும் போது அவ்ணுக்கள் பிரிந்து செல்கின்றன என்பதனையும் இந்நூல்கள் எடுத்துரைக்கின்றது, ஆழ்தலும் மிதத்தலும் அணுக்களின் பண்பாகும், அதேபோல் ஒரு அணு மற்றொரு அணுவுடன் சேரும் போது சமமான அளவில் சேர்வதில்லை என்பதனையும் இந்நூல்கள் எடுத்துரைக்கின்றது.

ஒரு அணு இரண்டு அணுவாக பிரிவதில்லை. அதேபோல் ஒர் அணு விரிந்து நிற்பதுமில்லை, சுருங்கி நிற்பதும்ல்லை. அணுக்கள் தத்தம் இயல்பில், பண்பில் நிலை மாறாமல் இணைகின்றது என்பதை இந்நூல்கள் தெளிவுர எடுத்துக் கூறுகின்றன. அணுக்கள் சேர்க்கை ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டில் நிகழ்கின்றது என்பதனை மணிமேகலை நூலும் சிவஞான சித்தியாரும் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

ன்றினை ஒருவி மூன்றங் குற்றிடா திரண்டு விட்டு

நின்றிடா திரண்டு கூடும் நெறிநிலம் நான்கு நீர்மூன்(று)

இன்றிரண் டழல்கா லொன்றாய் இசைந்திடும் பூமி யிவ்வா

றென்றநீர் தீகா லாகி ஈண்டுவ தென்றி யம்பும் .(சிவஞான)

எல்லா பொருட்களிலும் நில அணு, நீர் அணு, தீ அணு, காற்று அணு என இந்நான்கும் இடம்பெறும். இந்நான்கு அணுவும் சேர்ந்து ஒரு பொருளை உருவாக்குகின்றன ப்பொருள்களில் அணுவின் விகிதம் ஆனது (4:3:2:1) என்ற விகிதத்தில் சேர்கின்றது. எந்த ஆணு அதிக விழுக்காடு உடையதாக இருக்கின்றதோ அந்த அணுவின் தன்மை கொண்டு தான் அந்த பொருளும் பெயர் பெறும்.

அணுக்களின் தன்மை:

நிலநீ ரெரிகாற் றுயிரி னியல்பும்

பலநீ ரவற்றின் படுபா லவைதாம்

புலமா கொலியொன் றொழிய முதற்காஞ்

சலமா யதுதண் மையையே முதலாம். (நீலகேசி:675) 

என்ற பாடல் மூலம் அணுக்களின் தன்மையானது விவரிக்கப்படுகின்றன. நீரணு குளிர்ச்சி தன்மையினையும் கீழ்நோக்கி பாயும் இயல்பினையும் கொண்டது, நிலவணு கடின தன்மையினையும் பணிந்த இயல்பினையும் கொண்டது, காற்றணு இரைதல், அசைதல் என்ற தன்மைகளையும், கிடைமட்டமாய் நகரும் இயல்பினையும் கொண்டது, தீயணு எரிக்கும் தன்மையினையும், மேல் நோக்கி பரவும் இயல்பினையும் கொண்டது, உயிரணு அறிதல் அறிவித்தல் என்னும் பண்புகளோடு மேல் நோக்கி பரவும் இயல்பினையும் கொண்டது என இந்நூல் அணுக்களின் தன்மையை எடுத்துரைக்கின்றன.


 7.0 நிகந்த நாத புத்தர் என்ற மகாவீரரின்  ஆனகண்ட வாதம் அல்லது அனேக வாதம்

வர்த்தமான மகாவீரர் என்று அழைக்கப்படும் மகாவீரர் புத்த மத தோற்றுநரான கெளதம புத்தரின் சம காலத்தவர் ஆவார். சம்மண பால சூத்திரத்தில் வர்த்தமானர், நிகந்த நாத புத்தர் என அழைக்கப்படுகின்றார்.   இவர் கி.மு ஆறாம் நூற்றாண்டில் முற்பகுதியில் (599-527 தோராயமாக) பிறந்தவர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 23 ஆம் தீர்த்தங்கரர் ஆன பார்சுவ நாதரின் நேரடி சீடர் மகாவீரர் ஆவார். இவர் 24 ஆம் தீர்த்தங்கரர் என அழைக்கப்படுகின்றார். இவர் தனது துறவு வாழ்க்கையினை 30 அகவையிலிருந்து தொடங்கினார். ஜைனர்கள் அருகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர் அருக தேவன், நியாய புத்தா, முனி, சமணா, நிகந்தா, சன்மதி, அதி வீரா, ஞான புத்திரர் எனவும் பிற பெயர்களில் அழைக்கப்படுகின்றார். கல்ப சூத்திர நூல் இவரை சிரமணர் என்று அழைக்கின்றது.  இவர் பன்னிரெண்டரை ஆண்டுகள் கடும் தவம் புரிந்து ஞானத்தை அடைந்தார்.

ஜைன மத்தின் கடைசி தீர்த்தங்கரர் இவரே, இவருக்கு பின் ஜைனத்தை வழிநடத்த சரியான துறவிகள் உருவாக்கப்படவில்லை. ஆயினும் இம்மதம் இன்றளவும் இயங்கிக்கொண்டிருகின்றது. இவர் கற்பித்த கொள்கைகள் அனைத்தும் அனேக வாத கொள்கைகள் என அழைக்கப்படும். மேலும் அவர் சத்யவாத, நயவாத கொள்கைகளையும் கற்பித்தார். அவர் கற்பித்த கொள்கைகள் விரதங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

1.கொல்லாமை (அகிம்சை)

2.உண்மை (சத்தியம்)

3.களவாமை (அஸ்தேயம்)

4.கற்பு (பிரம்மச்சரியம்)

5.பற்றறு நிலை  அல்லது பற்றின்மை (அபரிகிருகம்)

 

1.கொல்லாமை (அகிம்சை)

      பிற உயிர்களுக்கு ஊறு விளைவிக்காமல் இருக்க இக்கொள்கை கற்பிக்கப்பட்டது. ஒவ்வொரு உயிரியும் புனிதமானது, அவ்வுயிரினை கண்ணியமாக நடத்த வேண்டும். ஒவ்வொரு உயிரிக்கும் கண்ணியம் உண்டு. இதனை சொல்லிலும் செயலிலும் பேச்சிலும் பின்பற்ற வேண்டும்.   

2.உண்மை (சத்தியம்)

      ஒவ்வொரு மனிதரும் சத்தியத்தை பின்பற்ற வேண்டும், அதே போல் பிறரிடமும் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும். 

3.களவாமை (அஸ்தேயம்)

      பிறரால் கொடுக்கப்படாத எந்த ஒன்றையும், வலிந்து பெறுதல், களவின் மூலம் அடைதல் இது போன்ற செயல்களை செய்யக்கூடாது.

4.கற்பு (பிரம்மச்சரியம்)

கற்பு நெறியானது இரு வகையாக கற்பிக்கப்படுகின்றது. 1.துறவு 2. இல்வாழ்க்கை. துறவு நெறியினை பேணுவோர் உடலுறவு, உடலுறவு தொடர்புடைய சிந்தனையையும், சிற்றின்பம், சிற்றின்பம் தொடர்புடைய சிந்தனையையும் தவிர்த்தல் வேண்டும். இல்வாழ்வோர் தன் துணையிடம் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும்.

5.பற்றறு நிலை அல்லது பற்றின்மை (அபரிகிருகம்)

     உலக உடைமைகளிலிருந்தும், தன் உடைமைகளிலிருந்தும் பற்றற்ற மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக துறவிகள் எந்த ஒன்றையும் தன் உடமையாக கருதக்கூடாது. மேற்குறிப்பிட்ட வர்த்தமான மகாவீரரின் கொள்கைகள் ஆன்ம விடுதலைக்கும், மறுபிறப்பினை தவிர்க்கவும் கற்பிக்கப்பட்டன. இவர் கற்பித்த இந்த கொல்லாமை எனும் நல்லொக்கமே இந்தியப் பண்பாட்டில் குவலயம் மெச்சத்தக்க புரட்சியை செய்தது. இந்திய உணவுப் பண்பாடு, ஊண் உண்ணாமை என்னும் நிலையினை இவரின் கற்பித்தலால் தான் அடைந்தது.

ஜைனர்கள் ஆன்மாவின் மீது அதிக நம்பிக்கை உடையவர்கள். வர்த்தமானர், ஆன்மா என்ற ஒன்று உள்ளது அது ஒரு பகுதிப்பொருள் (திரவ்யம்) ஆகும், ஆன்மா நிலையானது, அழிவில்லாதது, இந்த அண்டமானது திரவியம், உயிர் (ஜீவன்), உயிரற்ற (அஜ்ஜீவனால்) பொருள்களால் ஆக்கப்பெற்றது. கர்மாவின் படி ஒவ்வொரு ஆன்மாவும் ஒவ்வொரு நிறத்தை அடைகின்றன, இதனைப் பொறுத்தே உயிர்கள் மறுபிறப்பு எடுகின்றன. பிறப்பு, இறப்பு சுழற்சியில் உயிர் ஒரு பகுதிப்பொருள் ஆகும் என கற்பித்தார். இதனையும் இன்றைய இந்து மதம் அப்படியே உள்வாங்கிக்கொண்டது.

இன்றைய இந்து மதம் கூறும் கடவுளர்களின் குறியீடாக காணப்படும் விலங்குகளையும், ஜைன மதத்தில்  தீர்த்தங்கரர்களுக்கு குறியீடாக காணப்படும் விலங்குகளையும் ஒப்பு நோக்க.  வர்த்தமான மகாவீரரின் பின், குறியீடாக சிங்கம் காணப்படும். (ரிசபதேவரின் வாகனம் – காளை, இன்றைய இந்து மதத்தில் சிவனின் வாகனமாக காளை குறிப்பிடப்படுவதனை ஒப்புநோக்க).  

ஆனகண்ட வாதம்:

      இக்கோட்பாடனது தொடக்க கால ஜைன ஆகமங்களிலோ இலக்கியங்களிலோ காணப்படவில்லை. அனேகவாதம் என்பது பலபக்க உண்மையை பற்றி பேசுகின்றது. சீடர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வர்த்தமானர் அளித்த பதில்களே இக்கோட்பாடு ஆகும். இக்கோட்பாட்டின் முக்கிய கருத்துக்களாவன,

  1.  உண்மையும் யதார்த்தமும் சிக்கலானவை.
  2.  உண்மை பல அம்சங்களையும், பரிமாணங்களையும் கொண்டது.
  3.  யதார்த்தம் என்பது அனுபவத்தால் உணரப்படுவது.
  4.  யதார்த்தம் என்பது அனுபவத்தால் உணரப்பட்டாலும், அந்த அனுபவத்தினை மொழியின் வாயிலாக  முழுமையாக விரித்துரைக்க முடியாது.
  5.  மனிதர்கள் தொடர்புகொள்ளுதல் நியாயத்தின் ஒரு பகுதி ஆகும்.
  6.  மனிதர்கள் தொடர்புகொள்ளுதல் மூலம் பகுதி உண்மையையே வெளிப்படுத்துகின்றனர்.
  7.  மொழி என்பது உண்மையை வெளிப்படுத்த உதவும் ஒரு மூலமே ஆகும்.
  8.  உண்மையின் சுவையை ஒருவர் அனுபவத்தின் மூலம் சுவைக்க முடியும், ஆனால் இதனை  மொழிவழியாக முழுமையாக வெளிப்படுத்த முடியாது.
  9. ஆன்ம உண்மை அல்லது ஆன்மீக உண்மை பல அம்சங்களைக் கொண்ட சிக்கலான அமைப்பு உடையது.
  10.  மொழியால் உண்மையின் பன்மைத்தன்மையை வெளிப்படுத்த முடியாது.

ஜைன ஆகமத்தில் அப்பாலை கேள்விகளுக்கு வர்த்தமானர் அளிக்கும் பதில்கள், கோட்பாடுகளாக ஆசீவகத்திலும் இடம்பெற்றுள்ளது.

வர்த்தமானரின் தலைமை சீடரான இந்திரபூதி கெளதமரால் ஜைன கொள்கைகள் தொகுக்கப்பட்டு ஜைன ஆகமங்கள் நூலாக வெளியிடப்பட்டன. இந்நூலின் பெரும்பகுதி கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் தொலைந்து போயின. மீண்டும் இந்நூல் கி.பி. 5ஆம் நூற்றாண்டு வாக்கில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது.  

 

8.0 சஞ்ய பேலட்ட புத்திரனின் அஜ்னானம் என்னும் ஐயுறவு கோட்பாடு

பண்டைய நாத்திக பள்ளிகளில் இதுவும் ஒன்று. இக்கோட்பாடு அஞ்ஞான வாதம், ஐயுறவு வாதம் அல்லது சந்தேக வாதம் என அழைக்கப்படுகின்றது. துறவு இயக்கங்களுள் இப்பள்ளியும் ஒன்று. இப்பள்ளி பற்றிய குறிப்புக்கள், புத்த ஜைன மத நூல்களில் காணப்படுகின்றன.

இயற்கையின் வாயிலாக அப்பாலை அறிவினை பெறுவது அல்லது அடைவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என இப்பள்ளி கற்பித்தது. அறிவினை அடைவது என்பது சாத்தியமான ஒன்றாகினும், மனிதன் தன் இறுதி நிலையை எட்டும்போது அது பயனற்றதாகிவிடுகின்றது என்று கற்பிக்கப்பட்டது.

ஐயுறவு வாதமானது ரிக் வேத்திலும் காணப்படுகின்றது. நசதியா பாடல் பகுதியில் ஐயுறவு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. யஜ்னவல்கியர், ஐயுறவினை பற்றி பேசும் போது, ஆத்மாவின் உண்மையான யதார்தத்தை அறிவது கடினம் என்று வாதிடுகின்றார். இக்கோட்பாட்டினர் ஆன்மாவின் முரண்பட்ட கோட்பாடுகளையும், அது தொடர்புடைய அறிவியலையும் சுட்டிக்காட்டினர்.

பிரம்ம ஜால சூத்திர நூலானது, நான்கு விதமான ஐயுறவு பள்ளிகள் இருந்தன என்றும், அதனுடன் 58 மற்ற சிந்தனைப்பள்ளிகள் இருந்தன என்றும் கூறுகின்றது. ஆனால் ஜைன சூத்திரக்ருதங்கா 300 சிந்தனைப்பள்ளிகளில் 67 வகையான ஐயுறவு பள்ளிகள் இருந்தன என்று கூறுகின்றது.   

ஜைன சூத்திர கூற்றுப்படி, அறிவு தொடர்பான கூற்றுக்கள் ஒன்றுகொன்று முரணாக இருப்பதால் அதன் சாத்தியம் சந்தேகத்திற்கு இடமானது என்றும், அறிவு பற்றிய கோட்பாடினை கூறுபவர்கள் ஒன்றுகொன்று முரணான வாதத்தினை கூறுவதால் அவர்கள் ஒற்றைப்புள்ளியில் இணைவது கடினம் எனவே எது உண்மையான அறிவு என்று எவராலும் வரையறை செய்ய இயலாது என கூறுகின்றனர்.

ஆதிகால உபநிசத்துக்களில் ஆன்மா பற்றிய முரண்பாடான கருத்துக்கள் விரவியுள்ளன. ஜைன நூலில், இக்கோட்பாடு பற்றி கூறப்பட்டவை; அறிவு என்னும் பொருளின் இயற்கைத்தன்மையை மனிதர்களின் அறிவால் முழுமையாக புரிந்துகொள்ள இயலாது. எந்த ஒன்று அறியப்படுகின்றதோ அல்லது பிடிபடுகின்றதோ அதற்கு  அண்மை, சேய்மை, நடு என்ற பகுதிகள் காணப்படும். இதில் அண்மை என்ற பகுதிகள் மட்டுமே அறியப்படுகின்றது. மற்ற இரண்டும் வரையறை செய்யப்படாதாகவே உள்ளது. எனவே அனைத்தும் அறிந்தவர் எவருமில்லை. அனைத்தும் அறிந்தவரால் இயற்கை என்னும் பொருளின் தன்மையை புரிந்துகொள்ளுதல் என்பது கடினமான செயலாகும், என குறிப்பிடப்பட்டுள்ளது.

பெளத்த பாலி நூல்களில், இத்தத்துவத்தினை கூறியவர்கள் அமரவிகேபிகர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பெயரினை வாய்மொழி ஏமாற்று வித்தகர்கள் என இந்நூலினை ஆய்ந்தோர் மொழிபெயர்க்கின்றனர். இவர்கள் விலங்குகள் போல் அலைந்து திரிவதாகவும், இவர்கள் கோட்பாடு பற்றி கேட்டால் இவர்கள் வாய்மொழி ஏமாற்று வித்தை மூலம் பதில் அளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரம்ம ஜால சூத்திரமானது, இக்கோட்பாட்டினை முன் மொழிந்தவர்கள் மூவர் என கூறுகின்றது ஆனால் அம்மூவரின் பெயர்களை அந்நூல் குறிப்பிடவில்லை. அம்மூவரும். தவறால் ஏற்படும் பயம் (முசவதபயா), ஈடுபாட்டினால் ஏற்படும் பயம் (உபதானபயா) விவாத விசாரணையில் ஏற்படும் பயம் (அனுயோகபயா) இவற்றின் அடிப்படையில் சந்தேக வாதத்தை ஆதாரித்தனர் என்றும், இக்கோட்பாட்டினை ஆதரித்தவர்களை மக்கள் விரும்பவில்லை எனவும் அந்நூல் கூறுகின்றது. மேலும் இந்நூல் ஐயுறவு கோட்பாடில் இருந்த 4 பள்ளிகளின் கோட்பாடு பற்றியும் எடுத்துரைகின்றது.

  1. ஒருவரால் நன்மையும், தீமையும் உறுதியாக வறையறுக்கப்பட்டால் அது அவரின் விருப்பு வெறுப்புக்களிலிருந்து தோன்றுவது ஆகும்.
  2. சந்தேகம் ஏற்படும்போது போதுமான ஆதாரங்கள் அல்லது தகவல்கள் இல்லை எனில் ஒரு விசயத்தை தீர்மானிப்பதோ அல்லது அது பற்றிய ஒரு முடிவிற்கு வருவதோ தவறானது. போதுமான ஆதாரங்களின்றி தீர்மானித்தால் அது ஆபத்தை விளைவிக்கும்.
  3. முக்தியடைவதற்க்கு அறிவு அவசியமில்லை ஆனால் கர்மத்தை பற்றி பேசும் போது அறிவு தேவைபடுகின்றது.
  4. சந்தேகம் என்பது கவலை மற்றும் மன குழப்பத்திற்கு வழி வகுக்கும்.
  5. ஒருவர் நன்மை அல்லது தீமை வரையறை செய்யும் போது அறிவார்ந்தவர்களுடனோ, அல்லது சர்சையில் கைதேர்ந்தவர்களுடனோ விவாதிக்கும் சூழ்நிலை ஏற்படும் அல்லது அதைப்பற்றி வாதிடும் போது அறிவார்ந்தோர் அந்த விவாத்தினை தன் நுட்பமான கேள்விகள் மூலம் நன்மை அல்லது தீமைக்கான வரையறையை முறியடித்து விடுகின்றனர். இதனால் அனுயோக பயம் ஏற்படுகின்றது, இதனால் எது நன்மை எது தீமை என கூறாமலிருக்கலாம்.
  6. அடுத்த உலகம் இருக்கிறதா என்றால், அது ஒருவருக்கு அனுபவம் மூலம் ஏற்பட்டால் இருக்கிறது என கூறவேண்டும், ஆனால், நான் அப்படிச் சொல்லவில்லை, இவ்வாறு சொல்லவில்லை, வேறுவிதமாகச் சொல்லவில்லை, இல்லையென்று சொல்லவில்லை, மாற்றி கூறும் மறுப்பு மொழிகளை ஏற்க கூடாது.
  7. "நன்மை தீமை செயல்களின் விளைவு அதன் தொடர்ச்சி என்று ஏதுமில்லை" "சரியானவர் மரணத்திற்குப் பிறகு வாழ்கிறார், "சரியானவர் இறந்த பிறகு இருப்பதில்லை", "சரியானவர் இருக்கிறார் ஆனால் மரணித்தற்கு பிறகு அவர் இல்லை, “சரியானவர் இல்லை அல்லது இறப்புக்குப் பிறகு இல்லை" "அடுத்த உலகம் இல்லை", "அடுத்த உலகம் இல்லை", "இறந்து வாழும் உயிரினங்கள் உள்ளன",  "உயிர் பிழைக்கும் உயிரினங்கள் இல்லை", "உயிர்களும் இல்லை அல்லது இல்லை",

இதில் இறுதியாக (7) கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஐயுறவு வாத பள்ளி முட்டாள்தனமானது; என கூறுவதற்காக பெளத்தவர்கள் ஐயுறவு வாத பள்ளியின் மீது கொண்ட வெறுப்பின் மூலம் எழுதியவையாக இருக்கலாம், என இக்கோட்பாடினை ஆராய்ந்த ஜெயதிலகே கூறுகின்றார். (Jeyatilleke, K.N, (1963) Early Buddhist Theory of Knowledge), மேலும், இவர் கோட்பாடுகளை ஆராய்ந்த ஜெயதிலகே, சஞ்சய பேலட்டனின் ஐயுறவு கோட்பாடானது அறநெறியுடன் கூடிய அப்பாலைத் தத்துவத்தினை உள்ளடக்கியதாக உள்ளது என கூறுகின்றார்.   

இதில் உள்ள கருத்துக்கள் சஞ்சய பேலட்ட புத்தாவின் சமகாலத்தவராகவும், நன்கு அறியப்பட்ட மற்றும் புகழ்பெற்ற ஆசிரியராகவும், பொது மக்களால் உயர்வாக மதிக்கப்பட்ட சாரிபுத்தா மற்றும் மொக்கல்லானா அவர்கள் புத்த மதத்திற்கு மாறுவதற்கு முன்பு அவர் கற்பித்ததாக கூறப்படுகின்றது.  சமண்ண பால சூத்திர நூலானது, அஜாத சத்ரு மன்னர், சஞ்சய பேலட்டனை ”மிகவும் முட்டாள்த்தனமாவர், இவரின் கோட்பாடுகள் முட்டாள் தனமானவை” என விமர்சித்ததாக கூறுகின்றது.

0.9 முடிவுரை

     நம் தமிழகத்தில் ஆசீவக ஐயனார்களின் கோட்பாடுகள் இன்றளவும் பல்வேறு வடிவங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இன்றும் அறுவடை காலத்தில் மழையால் பயிர்கள் சேதமாயின் விதி என்று கூறியே மனிதன் தன்னை ஆற்றுப்படுத்துகின்றான், திருமண யோகம் வரும் போது திருமணம் நடந்தே தீரும் என்பது, விதி வலியது, வெள்ளை ஆடையினை அணிந்தோரை மிக உயர்வாகவும் மதிப்புடையோராகவும் கருதுவது, கொல்லாமையை, ஊண் உண்ணாமையை கடைபிடிப்பது, போன்ற பல கருத்தியல்களுக்கு ஆசீவக கோட்பாடுகளே அடிப்படை. மேலும் தத்துவ உலகில் புரட்சியினை செய்தவைதான் சார்வகம், ஜைனம், ஆசீவகம், பெளத்தம் போன்ற அவைதீக மதங்களாகும். இன்றளவும் தத்துவவியலில் பேசப்படும், Fatalism, Materialism, Skepticism, Eternalism, Atomism போன்ற தத்துவங்கள் இம்மதங்கள் மூலம் கி.மு 5 ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே உருவாக்கப்பட்டுவிட்டது என்பது நாம் தத்துவங்களில் சிறந்துவிளங்கியுள்ளோம் என்பதனை காட்டுகின்றது. எனவே இத்தத்துவங்களினை வருங்கால சந்ததிக்கும் எடுத்துரைப்போம். சாங்கியம், வைசேடிகம், நியாயம் போன்ற தத்துவங்கள் எவ்வாறு ஆசீவகத்துடன் தொடர்புடையது என்பதனை அடுத்துவரும் கட்டுரைகளில் காண்போம்.

மேற்குறிப்பு நூல்கள்:

1.    A.L.Basham (1951) History and Doctrines of Ajivikas,London: Luzac & Company Ltd.

2.    ர.விஜயலட்சுமி(1988) தமிழகத்தில் ஆசீவகர்கள்,சென்னை: உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.

3.    க.நெடுந்செழியன்(2009) ஆசீவகமும் ஐயனார் வ்ரலாறும், சென்னை: பாலம் பதிப்பகம்.

4.    Jeyatilleke, K.N, (1963) Early Buddhist Theory of Knowledge (1st Edn) George Allen& Unwin Publishers.

 

     

 

  

                      

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக